ரயில்வே துறையில் பல்வேறு நிலைகளிலும் ஊழல் நடப்பது உண்மையே. வெளிப்படையான நிர்வாகத்தாலும், கடும் நடவடிக்கையாலும் ஊழலை களையெடுக்க வழிவகை செய்யப்பட்டு வருகிறது என ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் பேசிய அமைச்சர், "ரயில்வே துறையில் பல்வேறு நிலைகளிலும் ஊழல் நடப்பது உண்மையே. ரயில்வே வாரிய உறுப்பினர் ஒருவர் ஊழலில் ஈடுபட்டதால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதையும் அறிவேன். ஒப்பந்ததாரர்கள் ஈடுபட்டுள்ள சில பிரிவுகளில் ஊழல் அதிகமாகக் காணப்படுகிறது.
ஊழலை களையெடுக்க ரயில்வே அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதற்கான அறிவுரைகளை வழங்குமாறு மத்திய தலைமை தணிக்கைக்குழு அதிகாரி வினோத் ராயிடம் கோரியுள்ளேன். அவரது அறிவுரைகளை ஏற்று ஊழலை தடுக்க அனைத்து சாத்தியக்கூறுகளும் ஆராயப்படும்.
முதற்கட்ட நடவடிக்கையாக வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்யும் வகையில் ரயில்வே ஒப்பந்த புள்ளிகள் ரயில்வே இணையத்தில் வெளியிடப்படுவதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்" என்றார்.