உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ரவுடி கும்பலின் தலைவர், தொழிலதிபர்களைக் கொல்லத் திட்டமிட்டதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் முகமது யூசுப் (32). இவர் வடக்கு டெல்லியில் உள்ள அலிபூர் எனும் இடத்தில் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தார். பிரபல பயங்கரவாதி தாவூத் இப்ராஹிமின் கும்பலில் இருந்த இஜாஜ் லக்டாவாலா என்பவரின் உதவியாளராக யூசுப் இருந்துவந்துள்ளார். இந்நிலையில், தொழிலதிபர்கள் மூவரைக் கொல்ல, துப்பாக்கி சுடுவதில் கைதேர்ந்த சிலரை பஞ்சாப்பில் இருந்து யூசுப் அழைத்துவந்தார். அப்போது போலீஸார் அவரை மடக்கிப் பிடித்தனர்.
இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, "மும்பையில் இரண்டு மற்றும் டெல்லியில் ஒன்று என மூன்று தொழிலதிபர்களைக் கொலை செய்வது யூசுப்பின் திட்டம். அதற்காக பஞ்சாபைச் சேர்ந்த துப்பாக்கி சுடுவதில் கைதேர்ந்தவர்கள் சிலரை அழைத்து வந்துள்ளார்" என்று கூறினர்.
கடந்த 20ம் தேதி கைது செய்யப்பட்ட இவர் 5 நாட்கள் போலீஸ் காவலில் இருந்தார். பின்னர் இந்த வழக்கு மாவட்ட நீதிமுன்றத்தின் முன்பு வைக்கப்பட்டது. அப்போது அதனை விசாரித்த நீதிமன்றம் அவரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டது.