பிஹார் அரசுக்கு எதிராக முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி தனது ஆதரவாளர்களுடன் தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் நேற்று உண்ணாவிரதம் இருந்தார்.
மாஞ்சி முதல்வராக இருந்த போது, எடுக்கப்பட்ட 34 முடிவுகளை தற்போதைய முதல்வர் நிதிஷ்குமார் ரத்து செய்ததைக் கண்டித்து இந்தப் போராட்டம் நடைபெற்றது.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் அதிருப்தி எம்எல்ஏக்கள் சிலரும், மாஞ்சி தலைமையிலான அரசில் கேபினட் அமைச்சர்களாக இருந்த சிலரும் இதில் பங்கேற்றனர்.
மாஞ்சி நேற்று செய்தியா ளர்களிடம் கூறும்போது, “எனது தலைமையிலான அமைச்சரவை எடுத்த அனைத்து முடிவுகளும் ஏழைகளின் நலனுக்காக எடுக்கப்பட்ட நியாயமான முடிகள் ஆகும். இவற்றை ரத்து செய்தது சட்டவிரோதம். இவற்றை செயல்படுத்த நிதி வசதியில்லை என்று கூறுவதை நிராகரிக்கிறேன். அரசு நிதியை வளர்ச்சித் திட்டங்களுக்கு செலவிடுவதற்கு பதிலாக நிதிஷ்குமார் தன்னை பிரபலப்படுத்திக்கொள்ள செல விடுகிறார்.
சர்வதேச அருங்காட்சியகம், மாநாட்டு அரங்கம், சட்டப் பேரவைக்கு புதிய கட்டிடம், எம்எல்ஏக்களுக்கு புதிய குடியிருப்புகள் என ஆயிரக் கணக்கான கோடி ரூபாய் திட்டங்களை நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். மாநிலத்தில் வறுமைக்கு எதிராக நாம் போராடிவரும் வேளையில் அதிக செலவிலான இந்த கட்டிடங்கள் தேவையில்லை” என்றார்.
மாஞ்சி மற்றும் அவரது ஆதரவாளர்கள் புதிதாக தொடங்கியுள்ள ஹிந்துஸ்தான் அவாமி மோர்ச்சா என்ற அமைப்பு சார்பில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.
மாஞ்சி தலைமையில் கடந்த பிப்ரவரி 10, 18, 19 ஆகிய தேதிகளில் நடந்த கடைசி 3 அமைச்சரவை கூட்டங்களில் 34 முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்நிலையில் நிதிஷ்குமார் தலைமையில் கடந்த 4-ம் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இம்முடிவுகள் ரத்து செய்யப்பட்டன.