உத்தரப் பிரதேச மாநில அமைச்சர் அசம் கான் அனைத்துக் கட்சி எம்எல்ஏக்களுக்கும் ஒரு கடிதம் எழுதி அத்துடன் துடைப்பம், பேனா ஆகியவற்றை பரிசாக வழங்கி உள்ளார்.
கடந்த 26-ம் தேதி சட்டப்பேரவை கூட்டம் முடிந்ததும் எம்எல்ஏக்களிடம் அசம் கான் கொடுத்த கடிதத்தில், “நான் இத்துடன் உங்களுக்கு இரண்டு பரிசுப் பொருட்களை (துடைப்பம், பேனா) வழங்குகிறேன். இந்த இரண்டில் சமுதாயத்தில் உள்ள பாவங்களைப் போக்க எது உதவும் என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.
முன்னதாக சட்டப்பேரவை கூட்டத்தின்போது அசம் கான் கூறும்போது, “பிரதமர் மக்களின் கையில் துடைப்பத்தைக் கொடுத்துவிட்டு, அவர்களிடமிருந்து பேனாவை வாங்கிக் கொண்டார்” என்றார். இதுகுறித்து பாஜக எம்எல்ஏ ராதா மோகன் தாஸ் அகர்வால் கூறும்போது, “தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் இந்த சமுதாயத்துக்கு பிரதமர் மோடி நல்ல தகவலை கூறியிருக்கிறார். அதை இவரால் ஜீரணிக்க முடியவில்லை. ஆனாலும், துடைப்பத்தைக் கொடுத்ததன் மூலம் பிரதமரின் திட்டத்தைப் பிரபலப்படுத்தி இருக்கிறார்” என்றார்.