பெங்களூருவில் ஆப்பிரிக்கர்கள் மீது கும்பல் ஒன்று விரட்டி விரட்டி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோத்தனூர் அருகே பைரதி என்ற இடத்தில் திங்கட் கிழமை இரவு இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இந்தத் தாக்குதலில் ஐவரி கோஸ்ட் நாட்டைச் சேர்ந்த 4 பேர் மற்றும் 2 போலீஸ்கள் காயமடைந்தனர். நள்ளிரவு 12.30 மணி முதல் அதிகாலை 3 மணி வரை ஆப்பிரிக்கர்களைத் தேடித் தேடி தாக்கியுள்ளனர்.
ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த ஒருவர் தனது காரில் அதிவேகமாகச் சென்றதாலும், காரை அதிக சப்தம் எழுப்பி ஓட்டியதாலும் அந்த இடத்தைச் சேர்ந்த பெங்களூரு வாசிகள் ஆத்திரமடைந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு காரில் ஆப்பிரிக்கர் ஒருவர் செல்ல இன்னொரு காரில் மேலும் சில ஆப்பிரிக்கர்கள் சென்றுள்ளனர்.
இரண்டு கார்களும் அதிவேகமாக, காட்டுத்தனமாக ஓட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இரண்டு கார்கள் மீதும் கும்பல் ஒன்று கல்லெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இது குறித்து அப்பகுதியில் இருந்த ஐவரிகோஸ்ட் நாட்டைச் சேர்ந்த வர்த்தகரான ஜான் என்பவர் கூறும் போது, “காலை 3 மணி வரை அந்தக் கும்பல் கண்ணில் படும் ஆப்பிரிக்க நாட்டவர்கள் மீது கடும் தாக்குதல் நடத்தினர். நான் போலீஸை அழைத்தேன், என்னையும் அதற்காக மிரட்டினர். பிறகு என்னையும் தாக்கினர்.” என்றார்.
இவர் தனது சகோதரியைக் காண பெங்களூருக்கு வந்துள்ளார். முதலில் தாக்குதலுக்கு இலக்கானவரும் இவரே. இவர் சம்பவ தினத்தன்று தனது சகோதரி மற்றும் சகோதரியின் நண்பர் ஆகியோருடன் வீடு நோக்கி வந்து கொண்டிருந்தார். தாக்குதல் நடந்ததையடுத்து இவரது சகோதரி மற்றும் அவரது நண்பர் அருகில் இருந்த தேவாலயத்தில் தஞ்சம் அடைந்தனர். ஆனால் ஜான் துரத்தி துரத்தி அடிக்கப்பட்டதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.
தாக்கப்பட்ட ஆப்பிரிக்கர்களுக்கு தாங்கள் எதற்காகத் தாக்கப்பட்டோம் என்று தெரியவில்லை என்று கூறியுள்ளனர்.
இது குறித்து அதிகாரபூர்வ புகார்கள் எதுவும் அளிக்கப்படவில்லை என்று பெங்களூரு போலீஸ் கூறியுள்ளது. இந்தச் சம்பவத்தை போலீஸ் பெரிது படுத்தவில்லை என்று தெரிகிறது.
ஆனால் அப்பகுதி வாசிகளில் சிலர் கூறும் போது, “ஆப்பிரிக்கர்கள் தெருக்களில் மதுபானம் அருந்துகின்றனர், வாகனங்களை அதிக சப்தத்துடன் காட்டுத் தனமாக ஓட்டிச் செல்கின்றனர்.” என்றனர். ஆப்பிரிக்கர்கள் சிலர் பீர் குடித்து விட்டு பாட்டில்களை ஒரு வீட்டின் மேல் அடித்துவிட்டுச் சென்றதாக சிலர் தெரிவித்துள்ளனர். இப்படியாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தை இந்தத் தாக்குதலுக்குக் கூறுகின்றனர்.
இது குறித்து கூடுதல் கமிஷனர், விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.