கடந்த 1993-ம் ஆண்டு நடந்த மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ஜைபுன்னிசா காஜியை விடுதலை செய்யவேண்டும் என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு கோரிக்கை விடுத்துள்ளார்.
மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்ததாக இந்தி நடிகர் சஞ்சய் தத்துடன் ஜைபுன்னிசா காஜிக்கு, கடந்த 2013-ம் ஆண்டு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பயங்கரவாதத்துக்கு எதிரான தடா சட்டத்தின் கீழ் காஜி தண்டிக்கப்பட்ட நிலையில், கடுமையற்ற ‘ஆயுதங்கள் சட்டத்தின்’ கீழ் சஞ்சய் தத் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில், “காஜி வலுவற்ற ஆதாரத்தின் அடிப்படையில் தண்டிக்கப்பட்டுள்ளார். உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள அவரை விடுவிக்காவிட்டால் அவர் சிறையிலேயே இறந்துவிடுவார்” என்று மார்கண்டேய கட்ஜு சமூக வலைதளம் ஒன்றில் கூறியுள்ளார்.
இதுகுறித்து கட்ஜு கூறும்போது, “சக கைதி ஒருவரின் மறுக்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலம் மட்டுமே, காஜிக்கு எதிரான ஒரே ஆதாரம் ஆகும். 72 வயதாகும் இப்பெண்மணிக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு உடல்நல பாதிப்புகளும் உள்ளது. இதனால் அவருக்கு அடிக்கடி மருத்துவப் பரிசோதனை செய்யவேண்டியுள்ளது. அவரை விடுதலை செய்யாவிடில் அவர் சிறையிலேயே இறந்துவிடுவார் என்று அஞ்சுகிறேன்” என்று கூறியுள்ளார்.
இதே காரணங்களை குறிப்பிட்டு, காஜியை விடுதலை செய்யக் கோரி மூத்த வழக்கறிஞர் சாந்தி பூஷன், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் இம்மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
கட்ஜு தனது சமூக வலைதளப் பக்கத்தில் மேலும் கூறும்போது, “நான் வழக்கறிஞராக 20 ஆண்டுகளும் நீதிபதியாக 20 ஆண்டுகளும் பணியாற்றியுள்ளேன். உச்ச நீதிமன்றத்தில் இருந்து கடந்த 2011 செப்டம்பரில் ஓய்வு பெற்றேன். காஜிக்கு எதிரான ஆதாரம் மற்றும் தீர்ப்பை நான் மிகவும் கவனமுடன் ஆராய்ந்தேன். இதில் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது தவறு என்ற முடிவுக்கு வந்தேன்” என்றார்.
காஜியை விடுதலை செய்ய வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கும் கட்ஜு கடிதம் எழுதியுள்ளார்.
காஜியை விடுவிக்குமாறு கட்ஜு கோருவது இது முதல் முறையல்ல. இதற்கு முன் 2013-ல் சஞ்சய் தத், ஜைபுன்னிசா காஜி ஆகிய இருவரையும் விடுதலை செய்யுமாறு குடியரசுத் தலைவரை கேட்டுக்கொண்டார். இந்நிலையில் காஜியின் மகள் ஷாகுப்தா தனக்கு அடிக்கடி அனுப்பும் கடிதங்களை தொடர்ந்து இந்த விவகாரத்தை மீண்டும் எழுப்புவதாக கட்ஜு கூறியுள்ளார்.
காஜியின் மகள் ஷாகுப்தா கூறும்போது, “இந்த விவகாரத்தை எழுப்பும் கட்ஜுவுக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். எங்கள் கோரிக்கை ஏற்கப்படும், எனது தாயாரின் துயர் நீங்கும் என்று நம்புகிறேன். அவரது ஆரோக்கியம் குறித்தே நாங்கள் கவலைப்படுகிறோம்” என்றார்.