இந்தியா

கருப்பு பண பதுக்கல்காரர்களுக்கு கடைசி வாய்ப்பு: மத்திய இணை அமைச்சர் கெடு

பிடிஐ

வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்க விரைவில் புதிய சட்டம் இயற்றப்படும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பொதுபட்ஜெட்டில் அறிவித்துள்ளார். இந்த சட்டம் நடப்பு கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்யப்பட உள்ளது.

புதிய சட்டத்தின்படி வெளிநாடுகளில் பணம், சொத்துகளை பதுக்கி வைத்திருப்போருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் வருமான வரி தாக்கலின்போது வெளிநாட்டு பணம், சொத்து விவரங்களை மறைப்போருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

காலஅவகாசம் அளிக்கப்படாது

இதுகுறித்து மத்திய நிதித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா கூறியதாவது:

வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்போர் உடனடியாக விவரங்களை வருமான வரித்துறையிடம் தாக்கல் செய்ய வேண்டும். இல்லையெனில் புதிய சட்டத்தின்படி அவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். அவர்களின் பணம், சொத்து மதிப்பில் 300 மடங்கு அபராதமும் விதிக்கப்படும்.

மேலும் வெளிநாட்டு முதலீடுகள் குறித்து ஆண்டுதோறும் வருமான வரி தாக்கல் செய்வது கட்டாயமாக்கப்படுகிறது. இதில் வங்கி முதலீடு, சொத்துகளை மறைப்போருக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. உள்நாட்டில் கருப்பு பண புழக்கத்தை கட்டுப்படுத்த விரைவில் பினாமி பரிவர்த்தனை தடுப்பு சட்டம் இயற்றப்படும். இச்சட்டத்தின்படி ரியல் எஸ்டேட் துறையில் ரூ.20 ஆயிரத்துக்கு மேல் ரொக்கமாக பணம் கைமாறுவது தடை செய்யப்பட உள்ளது. ரூ.1 லட்சத்துக்கு மேற்பட்ட பணப் பரிவர்த்தனைகளுக்கு பான் எண் கட்டாயமாகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சிறப்பு பலனாய்வு குழு வரவேற்பு

வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்க மத்திய அரசு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்துள்ளது. இந்தக் குழுவின் தலைவர் எம்.பி. ஷா, கூறியதாவது:

பட்ஜெட் அறிவிப்புகளை முழுமையாக வரவேற்கிறோம். இதன் மூலம் எதிர்காலத்தில் கருப்பு பண மீட்பு நடவடிக்கைகள் எளிதாகும். புதிய சட்டத்தை திறம்பட அமல்படுத்த வேண்டும். அப்போதுதான் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். உள்நாட்டில் கருப்பு பணத்தை மீட்க பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளையும் வரவேற்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT