திருப்பதி: திருப்பதியில் உள்ள செம்மர தடுப்பு பிரிவு அலுவலகத்தில் திருப்பதி மாவட்ட எஸ்.பி. சுப்புராயுடு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சீனா, ஜப்பான், மலேசியா, தாய்லாந்து உட்பட பல வெளிநாடுகளில் ஆந்திர செம்மரங்களுக்கு கிராக்கி உள்ளதால் சென்னை, மங்களூரு வழியாக கடத்தப்படுகின்றன. கடத்தல் தொடர்பாக 263 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 52 பழைய குற்றவாளிகளும் இந்த ஆண்டு கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 35,476 கிலோ எடை கொண்ட 1,872 செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 63 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
24 மணி நேரமும் அதிரடிப்படையினர், வனத்துறையினர் சேஷாசலம் வனப்பகுதியில் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தினமும் இந்த வனப்பகுதிகளில் குறைந்த பட்சம் 10 கி.மீ வரை ரோந்து பணிகள் நடைபெறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளோம்.
கடத்தல்காரர்களின் சொத்துகளை இனி சட்டப்படி ஜப்தி செய்வோம். தமிழகம், கர்நாடகா, குஜராத் மற்றும் டெல்லி ஆகிய நகரங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.16.5 கோடி மதிப்புள்ள செம்மரங்களையும் அதிரடிப்படை இந்த ஆண்டு பறிமுதல் செய்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் அதிகமாக தமிழகத்தைச் சேர்ந்த செம்மர கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அடுத்ததாக ஆந்திரா, கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வரும் ஆண்டுகளில் மாநிலங்களுக்கிடையே உள்ள அதிகாரிகளுடன் இணைந்து செம்மரக் கடத்தலை தடுக்க ‘ஆபரேஷன்’ கள் நடத்தப்படும். இவ்வாறு எஸ்பி சுப்புராயுடு கூறினார்.