அனைத்து மாநிலங்களிலும் குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் பசுவதை தடுப்புச் சட்டத்தை அமல்படுத்த பாஜக தீவிர முயற்சி மேற்கொள்ளும் என அக்கட்சி வட்டாரம் தெரிவித்துள்ளது.
ஹரியாணாவைத் தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலத்திலும் பசுவதை தடுப்புச் சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாஜகவின் பசு மேம்பாட்டுப் பிரிவுத் தலைவர் மாயங்கேஸ்வர் சிங் 'தி இந்து' நாளிதழுக்கு அளித்தப் பேட்டியில், "பிஹார் தேர்தலின்போது, பசுவதை தடுப்புச் சட்டம் கொண்டு வருவது குறித்து அறிவிப்பு தேர்தல் அறிக்கையிலேயே இடம் பெரும்" என்றார்.
இவர் கடந்த 2014 ஆகஸ்டில் பிரதமர் மோடியை சந்தித்து பசுவதையை தடுக்க மத்திய அரசு சட்டம் கொண்டுவர வலியுறுத்தினார் என்பது கவனிக்கத்தக்கது.
இந்நிலையில் கட்சியின் துணைத் தலைவர் கூறும்போது, "பசுவதையை தடுக்க வேண்டும் என்பது கட்சியின் கொள்கையாக இருந்தாலும், மத்திய அரசு இது தொடர்பாக சட்டம் இயற்ற வலியுறுத்தப்போவதில்லை. இப்பிரச்சினை சற்று உணர்வுப்பூர்வமானது. இதில் ஒருமித்த கருத்து எட்டப்பட வேண்டும் அப்போதுதான் மத்திய அரசிடம் இவ்விவகாரத்தை எடுத்துச் செல்ல முடியும்" என்றார்.