இந்தியா

சுனந்தா கொலை வழக்கு: பாக். பத்திரிகையாளரிடம் விசாரணை

ஐஏஎன்எஸ்

சுனந்தா புஷ்கர் கொலை வழக்கை விசாரித்து வரும் டெல்லி போலீஸின் சிறப்பு புலனாய்வுக் குழுவினரால் விரைவில் பாகிஸ்தான் பத்திரிகையாளர் மெஹர் தரார் விசாரிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் (52) கடந்த ஆண்டு டெல்லி நட்சத்திர ஓட்டலில் இறந்து கிடந்தார். இவரது மர்ம மரணம் தொடர்பான வழக்கு பல கட்டங்களை அடுத்து கொலை வழக்காக ஜனவரி 1-ஆம் தேதி டெல்லி போலீஸின் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் அறிவித்தனர். அதன்படி இந்த வழக்கில் அறியப்படாத நபர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் இது தொடர்பாக பாகிஸ்தான் பத்திரிகையாளர் மெஹர் தரார் விரைவில் விசாரிக்கப்படுகிறார். "தராரின் விசாரணை இந்த வழக்குக்கு பொருந்தக் கூடியது தான். விரைவில் அவரிடம் விசாரணை நடக்கலாம்" என்று டெல்லி காவல் ஆணையர் பி.எஸ். பஸ்ஸி தெரிவித்தார்.

சசி தரூருக்கும் பாகிஸ்தானின் லாகூரைச் சேர்ந்த மெஹர் தராருக்கும் இடையே நட்பு இருந்த நிலையில், இவர்களது உறவு குறித்து சுனந்த புஷ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பாகிஸ்தான் முதலில் காஷ்மீருக்கு ராணுவத்தை அனுப்பியது, இப்போது பத்திரிகை யாளர்களை அனுப்புகிறது" என்று விமர்சித்திருந்தார்.

இந்த விமர்சனத்துக்கும் சுனந்தா-சசி தரூர் உறவிலான பிரச்சினைகளுக்கு சுனந்தாவின் கொலை வழக்கிலும் தொடர்பிருக்கலாம் என்று இந்த வழக்கின் தொடக்கத்திலிருந்தே சந்தேகம் நிலவுகிறது.

SCROLL FOR NEXT