‘‘நிலம் கையகப்படுத்துதல் சட்ட மசோதா விவசாயிகளின் நலனுக்கானதுதான். இதுகுறித்து வெளிப்படையாக விவாதம் நடத்த வாருங்கள்’’ என்று எதிர்க்கட்சிகளுக்கு மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அழைப்பு விடுத்துள்ளார்.
நிலம் கையகப்படுத்துதல் சட்ட மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த மசோதா விவசாயிகளுக்கு எதிராக உள்ளது என்று கூறி எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் மசோதாவை தடுக்கக் கோரி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடமும், எதிர்க்கட்சித் தலைவர்கள் மனு அளித்தனர்.
இந்த மசோதாவை வாபஸ் பெற கோரி, சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரேவும் போராட்டங்கள் நடத்தி வருகிறார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி உட்பட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் மற்றும் ஹசாரேவுக்கு, மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று கடிதம் எழுதி உள்ளார். அதில் கட்கரி கூறியிருப்பதாவது:
நிலம் கையகப்படுத்துதல் மசோதா விவசாயிகளுக்கு எதிரானது அல்ல. உண்மையில் விவசாயிகளின் நலனுக்கான மசோதா.
இதுகுறித்து திறந்த மனதுடன் விவாதம் நடத்த வாருங்கள். மசோதா தொடர் பாக எல்லா அம்சங்கள் குறித்தும் விவாதிக்க மத்திய அரசு தயாரா கவே உள்ளது. மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா, மாநிலங்களவையின் ஒப்பு தலுக்காகக் காத்திருக்கிறது.
கிராமப்புறங்களின் வளர்ச்சி, விவசாயிகளின் மேம்பாட்டை மனதில் வைத்துதான், நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் சில திருத்தங்களை மோடி தலைமையிலான அரசு கொண்டு வந்துள்ளது. ஆனால், அரசியல் காரணங்களுக்காக எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன. நிலம் கையகப்படுத்தும்போது அதன் உரிமையாளர்களுக்கு நஷ்டஈடு வழங்குவதில் எந்த சமரசமும் செய்ய முடியாது என்றுதான் மசோதாவில் உள்ளது. உண்மையில் இந்த மசோதா, விவசாயிகளின் வாழ்வில் வளம் கொண்டு வந்து சேர்க்கும்.
எதிர்க்கட்சிகளுடன் ஆலோ சனை நடத்தாமல், இந்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்ததுபோல் எதிர்க்கட்சியினர் பேசி வருகின்றனர். ஆனால், மசோதாவைக் கொண்டு வருவதற்கு முன்னர் எல்லா மாநில அரசுகளுடனும் மத்திய அரசு ஆலோசனை நடத்தியது. மாநில அரசுகள் வழங்கிய யோசனைகளையும் ஏற்று அதற்கேற்பதான் மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகள் தேவையில்லாமல் அரசியல் காரணங்களுக்காக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்த மசோதா குறித்து விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் முன்வரவேண்டும்.
இவ்வாறு நிதின் கட்கரி கடிதத்தில் கூறியுள்ளார்.
ஏப்ரல் 5-ம் தேதியுடன் நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டம் காலாவதியாகிறது. அதற்குள் மசோதாவை நிறைவேற்ற வேண்டும். நாடாளுமன்ற நடப்பு கூட்டத் தொடரிலேயே மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சிக்கிறது.