செவ்வாய் கிரகத்தில் ஒரு காலத்தில் கடல் இருந்ததற்கான அடையாளங்கள் உள்ளன என்று புதிய ஆய்வில் விண்வெளி ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவில், கோடார்ட் விண்வெளி உயிரியல் மையத்தைச் சார்ந்த தலைமை விஞ்ஞானி மைக்கேல் மும்மா கடந்த ஆறு ஆண்டுகளாக மேற்கொண்ட ஆய்வில் இத்தகவல் வெளியாகியுள்ளது.
செவ்வாய் கிரகத்தில் வட துருவத்தில் லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு கடல் இருந்தது. அது ஆர்க்டிக் பெருங்கடலின் அளவுக்குப் பெரிய கடலாக இருந்துள்ளது.
பூமியில் இருப்பதைப் போலவே ஒரு வகையான நீர் செவ்வாயிலும் இருந்துள்ளது. அதாவது, இங்கு இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள், ஒரு ஆக்ஸிஜன் அணு சேர்ந்த நீர் போலவே செவ்வாயிலும் இருந்துள்ளது.
அதேசமயம் இன்னொரு வகையான நீரும் செவ்வாயில் இருந்திருக்கிறது. அந்த வகையான நீர், ஹைட்ரஜன் அணு ஒன்றில் உள்ள தனிமமான டியூட்ரியம் என்பதைக் கொண்டிருந்தது.
பூமியில் உள்ள நீரில் இருக்கும் டியூட்ரியத்தின் அளவைக் காட்டிலும், செவ்வாயில் எட்டு மடங்கு அதிகமாக டியூட்ரியம் இருந்தது என்று கணிக்கப்பட்டுள்ளது. அதாவது, செவ்வாய் கிரகத்தை 137 மீட்டர் ஆழத்தில் மூழ்கடித்துவிடக் கூடிய அளவுக்கு ஒரு காலத்தில் அந்த கடலின் நீர் அளவு இருந்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
இந்தப் புதிய கண்டுபிடிப்பு செவ்வாய் கிரகத்தைப் பற்றி தங்களுக்குப் மேலும் பல புரிதல்களைத் தந்திருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
"இந்த அளவுக்கான நீர், பல ஆண்டு காலமாக செவ்வாயில் இருந்தது என்றால், நிச்சயமாக அங்கே உயிர்கள் தோன்றி வளர்வதற்கான வாய்ப்புகளும் இருக்கவே செய்யும்" என்று கோடார்ட் விண்வெளி மையத்தைச் சேர்ந்த பால் மஹாஃபி தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பே நாசாவின் 'கியூரியோசிட்டி ரோவர்' விண்கலம் செவ்வாயில் நீர் இருந்திருக்கலாம் என்று கூறியிருந்தாலும், அங்கு ஒரு கடலே இருந்திருப்பதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி அது தகவல்கள் ஏதும் அனுப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.