இந்தியா

என்னுடைய விடுதலைக்கு மாநில அரசு சலுகை காட்டவில்லை: பிரிவினைவாத தலைவர் மஸ்ரத் ஆலம் கருத்து

பிடிஐ

என்னுடைய விடுதலைக்கு ஜம்மு காஷ்மீர் மாநில அரசு சலுகை காட்டவில்லை என்று நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள பிரிவினைவாத அமைப்பான முஸ்லிம் லீக் தலைவர் மஸ்ரத் ஆலம் தெரிவித்துள்ளார்.

மஸ்ரத்தை விடுதலை செய்தது குறித்து கூட்டணிக் கட்சியான பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், முதல்வர் முப்தி முகமது சையது தலைமையிலான அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் இவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மஸ்ரத் ஆலம் நேற்று கூறியதாவது:

எனக்கு சாதகமாக செயல்பட்டதாகக் கூறி மாநில அரசுக்கு எதிராக சிலர் குரல் எழுப்பி வருகின்றனர். ஆனால் என்னுடைய விடுதலைக்கு மாநில அரசு எவ்வித சலுகையும் காட்டவில்லை. வழக்கமான நீதிமன்ற நடைமுறைகளின் ஒரு பகுதியாக சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளேன்.

சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட விவகாரத்தில் எனக்கும் மாநில அரசுக்கும் ரகசிய உடன்பாடு இருப்பதாகக் கூறுகிறார்கள். அப்படி ஏதும் இல்லை. கடந்த 20 ஆண்டுகளாக சிறைக்கு செல்வதும் வெளியில் வருவதுமாக உள்ளேன். ஆனால் கடந்த நான்கரை ஆண்டுகளாக எனக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியபோதும், பொது சொத்து பாதுகாப்பு சட்டத்தின் (பிஎஸ்ஏ) கீழ் தொடர்ந்து என்னை கைது செய்தனர்.

பிரிவினைவாத அமைப்புக்கும் அரசுக்கும் இடையே மீண்டும் அமைதி பேச்சுவார்த்தை தொடங்குவதற்கான அறிகுறியாக நான் விடுவிக்கப்பபட்டுள்ளேனா என்று கேட்கிறீர்கள். பேச்சுவார்த்தை குறித்து ஹுரியத் மாநாட்டு அமைப்புதான் முடிவு செய்யும்.

ஏனெனில் நாங்கள் (முஸ்லிம் லீக்) அதன் ஒரு அங்கமாக உள்ளோம். எனவே அந்த அமைப்பு எந்த முடிவை எடுத்தாலும் அதை நாங்கள் பின்பற்றுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். 42 வயதான மஸ்ரத் ஆலம், அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதற்காக கடந்த 2010-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டார். ஜம்மு-காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சியும் பாஜகவும் இணைந்து கூட்டணி அரசை அமைத்த ஒரு வாரத்தில் இவர் நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்டார்.

SCROLL FOR NEXT