ஏர்செல் மேக்சிஸ் விவகாரத்தில் சிபிஐ நீதிமன்றத்தின் அதிகார வரம்பு குறித்து கேள்வி எழுப்பி, கலாநிதி மாறன் மற்றும் தயாநிதி மாறன் தரப்பில் தனித்தனியாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஏர்செல் நிறுவனத்தின் உரிமை யாளரான சிவசங்கரனை கட்டாயப் படுத்தி அவரின் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அனந்த கிருஷ்ணனுக்கு விற்கச் செய்ததாகவும், அதற்குப் பலனாக, மேக்சிஸ் நிறுவனத்திடமிருந்து வேறொரு நிறுவனம் வழியாக சன் டைரக்ட் டிவி நிறுவனத்துக்கு முதலீடு என்ற வகையில் ஆதாயம் அடைந்ததாகவும் தயாநிதி மாறன் மீது சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தயாநிதி மாறன், கலாநிதி மாறன், மலேசிய தொழிலதிபர் அனந்த கிருஷ்ணன், மலேசியாவைச் சேர்ந்த அகஸ்டஸ் ரால்ஃப் மார்ஷல் ஆகிய நான்கு பேர் மீதும், சன் டைரக்ட் டிவி பிரைவேட் லிமிடெட், மேக்சிஸ் கம்யூனிகேஷன் பெர்ஹாட், ஆஸ்ட்ரோ ஆல் ஏசியா நெட்வொர்க், சவுத் ஏசியா என்டர்டெயின்மென்ட் ஹோல்டிங் லிமிடெட் ஆகிய நான்கு நிறுவனங்கள் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. இவ்வழக்கில் 155 அரசு சாட்சிகள், 635 ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட சிபிஐ சிறப்பு நீதி மன்ற நீதிபதி ஓ.பி.சைனி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கலாநிதி, தயாநிதி உள்ளிட்ட அனைவரும் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி யிருந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, கலாநிதி, தயாநிதி மற்றும் சன் டிரைக்ட் நிறுவன பிரதிநிதிகள் ஆஜ ராயினர். இந்த வழக்கை விசாரிக்க சிபிஐ நீதிமன்றத்துக்கு அதிகாரம் இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பி, கலாநிதி மற்றும் தயாநிதி சார்பில் தனித்தனியாக மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி ஓ.பி.சைனி, இதுகுறித்து ஆகஸ்ட் 3-ம் தேதிக்குள் சிபிஐ பதிலளிக்க உத்தரவிட்டார்.
ஜாமீனுக்கு எதிர்ப்பு
கலாநிதி, தயாநிதி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுக் களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்யப் பட்டது. அரசு தரப்பு வழக்கறிஞர் கே.கே.கோயல், ‘மலேசிய தொழில திபர் அனந்தகிருஷ்ணன், அகஸ்டஸ் ரால்ஃப் மார்ஷல் உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள நான்கு பேருக்கு சம்மன் அனுப்ப முடியவில்லை. எனவே, புதிதாக அவகாசம் அளித்து சம்மன் பிறப்பிக்க வேண்டும்’ கோரினார். அவர்களுக்கு வெளியுறவுத்துறை மூலம் சம்மன் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார். வழக்கின் அடுத்த விசாரணையை ஆகஸ்ட் 3-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
இதற்கிடையே, கலைஞர் டிவி-க்கு ரூ.200 கோடி பண பரி மாற்றம் நடந்தது குறித்து மத்திய அமலாக்கப் பிரிவு தாக்கல் செய் துள்ள வழக்கு விசாரணை நீதிபதி ஓ.பி.சைனி முன்பாக நேற்று நடந்தது.
இதில், ஆ.ராஜா, கனிமொழி, தயாளு உள்ளிட்டோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய் யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட் டவர்கள் பதிலளிக்க 400 கேள்வி கள் அடங்கிய பட்டியல் வழங்கப் பட்டுள்ளது.
வழக்கறிஞர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதாலும், கேள்விகளுக்கு பதிலளிக்க கால அவகாசம் தேவைப்படுவதாலும் வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரப்பட்டது. அதை ஏற்று வழக்கை ஆகஸ்ட் 3-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.