இந்தியா

சீக்கியர் கலவர வழக்கு: இறுதி அறிக்கை மீது ஏப். 22-ல் விசாரணை

பிடிஐ

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து 1984-ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராகக் கலவரம் வெடித்தது. அப்போது சீக்கியர்கள் பலர் கொல்லப்பட்டனர். கலவரத்தைத் தூண்டியதாக காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெகதீஷ் டைட்லர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக விசாரணை நடத்திய சிபிஐ ஜெகதீஷ் டைட்லருக்கு இதில் தொடர்பு இல்லை என அறிக்கை தாக்கல் செய்தது. இதையடுத்து டெல்லி நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. ஆனால், கொல்லப்பட்டவர்களில் ஒருவரான பாதல் சிங் என்பவரின் மனைவி லக்விந்தர் கவுர் இதையெதிர்த்து வழக்கு தொடர்ந்தார்.

கடந்த 2013-ம் ஆண்டு செஷன்ஸ் நீதிமன்றம் மீண்டும் விசாரணை செய்து இறுதியறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து சிபிஐ இறுதியறிக்கை தாக்கல் செய் துள்ளது. ஆனால், இறுதியறிக்கை தாக்கல் செய்யப்பட்டது குறித்து பாதிக்கப்பட்டவரும், புகார்தாரருமான லக்விந்தர் கவுர் தரப்புக்கு சிபிஐ தெரிவிக்கவில்லை.

இதுதொடர்பாக லக்விந்தர் கவுர் தரப்பு அதிருப்தியடைந்துள்ளது. சிபிஐ இறுதி அறிக்கையை ரகசியமாகத் தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் என்ன எனக் கேள்வியெழுப்பியுள்ளது லக்விந்தர் தரப்பு. இந்நிலையில், இறுதி அறிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால், பெருநகரக் குற்றவியில் நீதிமன்ற கூடுதல் தலைமை நீதிபதி கடந்த 20-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை பயிற்சி முகாமில் பங்கேற்றுள்ளார். ஆகவே, நேற்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

இறுதி அறிக்கை மீதான விவாதம் வரும் ஏப்ரல் 22-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT