பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டு, விசாரணைக் கைதிகளாக உ.பி. சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சார்ந்திருக்கும் கிரிமினல் கும்பல்களுக்கு இடையே நிலவும் கடுமையான பகை காரணமாக, அவர்கள் விசாரணைக்காக நீதி மன்றம் அழைத்து வரப்படும்போது சுட்டுக்கொல்லப்படும் சம்பவம் அதிகரித்து வருகிறது.
கடந்த பிப்ரவரி 16-ம் தேதி முசாபர்நகர் மாவட்ட நீதிமன்ற வளா கத்தில், விக்கி தியாகி என்ற விசா ரணைக் கைதியை மர்ம நபர் ஒருவர் நீதிபதி முன்னிலையிலையே சுட்டுக் கொன்று விட்டு தப்பி விட்டார். இதே பாணியில், பிப்ரவரி 23-ம் தேதியும் மொரதாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் யோகேந்தர் சிங் என்ற கிரிமினலும் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 25-ம் தேதி பரேலியில், விஷம் கலந்த உணவை வழங்கி மூன்று கிரிமினல் கைதிகள் கொல்லப்பட்டனர். இதேபோல் அலிகர், ஏட்டா, கான்பூர் உட்பட பல்வேறு இடங்களில் விசாரணைக் கைதிகள் நீதிமன்ற வளாகங்களில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, உ.பி.யில் ஆளும் சமாஜ்வாதி கட்சி தலைமையிலான அரசு, நீதிமன்றங்களுக்கு அழைத்து வரப்படும் போது கிரிமினல் கைதிகளுக்கு குண்டு துளைக்காத ஜாக்கெட் அணிவிப்பது குறித்து ஆலோசித்து வருகிறது.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் காவல் துறை அதிகாரிகள் கூறும் போது, ‘கிரிமினல் வழக்குகளில் சிக்கி சிறையில் இருக்கும் கைதிகளில் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள் அதிகம். இதனால் அவர்கள் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகளைப் பெற முயன்று வருகின்றனர். இவர்கள் கோரிக்கையை மாநில அரசும் தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது” என்றனர்.