இந்தியா

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம்: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தல்

பிடிஐ

வட மாநிலங்களில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மத்திய மற்றும் ஹரியாணா மாநில அரசுகள் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தி உள்ளார்.

வழக்கத்துக்கு மாறாக (பருவம் இல்லாமல்) வட மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் பயிர்கள் சேதமடைந்து விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஒரு நாள் சுற்றுப் பயணமாக நேற்று காலையில் ஹரியாணாவுக்கு சென்ற சோனியா, பிவானி மாவட்டம் பத்ரா மற்றும் ரோட்டக் மாவட்டம் ரத்தன்தால் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த விவசாயி களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

விவசாயிகளை சந்தித்த பின் சோனியா காந்தி செய்தியாளர் களிடம் கூறியதாவது:

நாட்டு மக்கள் அனை வருக்கும் தேவையான உணவுப் பொருட்களை உற்பத்தி செய்ப வர்கள் விவசாயிகள். இப்போது மழையால் பாதிக்கப்பட்டுள்ள இந்த விவசாயிகளுக்கு உதவி செய்ய வேண்டியது நம் அனைவரின் பொறுப்பு ஆகும்.

அதிலும் குறிப்பாக பாதிக்கப் பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக உரிய நிவாரணம் வழங்க வேண்டியது மத்தியிலும் மாநிலத்திலும் உள்ள பாஜக தலைமையிலான அரசின் கடமை ஆகும். மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இல்லாவிட்டாலும், விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க போராடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சோனியாவுடன் ஹரியாணா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஷகீல் அகமது, மாநில காங்கிரல் தலைவர் அசோக் தன்வார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

முன்னதாக, நேற்று முன்தினம் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் மழையால் பாதிக் கப்பட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளை சோனியா சந்தித்து ஆறுதல் கூறினார்.

நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் திருத்தம் செய்ய வகை செய்யும் திருத்த மசோதாவைக் கண்டித்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி சோனியா தலைமையில் பேரணி நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட கிராமங்களை அவர் பார்வையிட்டு வருகிறார். இதன் மூலம் விவசாயிகள் பிரச்சினை மீது காங்கிரஸ் கட்சி கவனம் செலுத்த தொடங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT