அண்டை நாடுகள் எல்லையை மீறினால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் ஜவுன்பூரில் உள்ள கல்லூரியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
நமது அண்டை நாடுகளுடன் சுமுக உறவை வைத்துக்கொள்ள மத்திய அரசு விரும்புகிறது. அதேநேரம் எந்த ஒரு நாடும் எல்லையை மீற முயற்சித்தால் தக்க பதிலடி கொடுக்கப்படும். குறிப்பாக போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் அதற்கு பதில் தாக்குதல் நடத்தப்படும்.
மாவோயிஸ்ட் மற்றும் தீவிரவாதிகளின் தாக்குதலை ஒடுக்க மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக கலந்துகொண்ட முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் கூறும்போது, “சமூக விரோதிகளை ஒழித்தால் மட்டுமே நமது நாடு வளர்ச்சிப் பாதையில் வேகமாக பயணிக்க முடியும்” என்றார்.