கடந்த ஆண்டு மார்ச் 6-ம் தேதி, மகாராஷ்டிர மாநிலம், சொனாலே என்ற இடத்தில் ராகுல் காந்தி, மக்களவை தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது, ஆர்எஸ்எஸ் தொண்டர்தான் மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்றார் என்று பேசியதாக கூறப்படுகிறது. ராகுல் காந்தியின் இந்தப் பேச்சுக்கு எதிராக, தானே மாவட்டம், பிவாண்டி நகர நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடரப் பட்டது.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் பிவாண்டி பகுதி செயலாளர் ராஜேஷ் குன்ட்டே இந்த வழக்கை தொடர்ந்தார். அவர் தனது மனுவில், ராகுல் காந்தியின் இந்தக் கருத்தால் ஆர்எஸ்எஸ் மீதான நன்மதிப்பு குலைந்துபோனதாக குற்றம் சாட்டியிருந்தார்.
இம்மனுவை விசாரணைக்கு ஏற்ற பிவாண்டி நீதிமன்றம் ராகுல் காந்தியை நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரியும் வழக்கை ரத்துசெய்யக் கோரியும் மும்பை உயர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனு நீதிபதி எம்.எல். தஹலியானி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ராகுல் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடும் போது, “தூண்டுதலின் பேரிலும் தீய நோக்கத்துடனும் ராகுல் காந்திக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது விசாரணைக்கு ஏற்புடையதல்ல. மனுதாரரின் குற்றச்சாட்டு தொடர்பாக காவல் நிலையத் திலும் வழக்கு பதிவு செய்யப்பட வில்லை. பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு பக்கபலமா கவே இந்த வழக்கு தொடரப் பட்டுள்ளது” என்றார்.
இதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “ராகுல் காந்தி தனது தரப்பு நியாயங்களை விசாரணை நீதிமன்றத்திலேயே தெரிவிக்கலாம்” என்றார்.
இதைத் தொடர்ந்து ராகுல் மனுவை நிராகரித்த நீதிபதி, அவர் உச்ச நீதிமன்றத்தை அணுக உரிய கால அவகாசம் அளித்து உத்தரவிட்டார்.