மிக வலுவான ஊடுருவல் தடுப்பு நடவடிக்கைகளால் எல்லையில் ஊடுருவல் குறைந்துள்ளது என ஜம்மு-காஷ்மீர் மாநில காவல்துறை தலைவர் கே. ராஜேந்திர குமார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: நமது ஊடுருவல் எதிர்ப்பு நடவடிக்கைகள் மிகவும் வலுவானவை. எல்லையில் நமது படைகள் மிகுந்த விழிப்புடன் உள்ளன. 2013-ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 2014-ம் ஆண்டில் ஊடுருவல் குறைந்துள்ளது. நடப்பாண்டிலும் வெகுவாக ஊடுருவல் சம்பவங்கள் வெற்றிகரமாகக் குறைந்துள்ளன. மக்களும் ஒத்துழைக்க முன்வருவதால் இம்முறை சேதங்கள் வெகுவாகக் குறைந்துள்ளன. அனைத்து மக்களுமே அமைதியைத்தான் விரும்புகின்றனர், வன்முறையை அல்ல.
நமது இளைஞர்கள் தவறான பாதையில் செல்வதற்கான காரணங்களை ஆராய்ந்து, அந்த வழிகளை அடைத்து வருகிறோம். தீவிரவாதப் பாதையில் இளைஞர்களை ஈர்ப்பவர்களைக் கண்டறிந்தால் அவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கப்படும்.
மாநிலத்தில் அதிகரித்து வரும் போதை மருந்து பழக்கம் எங்களுக்கு பெரும் கவலையை அளிப்பதாக உள்ளது. எல்லை தாண்டிய வர்த்தக ஒப்பந்த அடிப்படையில் சலாமாபாத் பகுதியிலிருந்து வரும் வாகனங்களை ஆய்வு செய்ததில், ஏராளமான போதைப்பொருட்களைப் பறிமுதல் செய்துள்ளோம். அவற்றை பாகிஸ்தான் தரப்பு அதிகாரிகளிடம் சான்றாகக் காட்டியுள்ளோம்.
அவர்களும் இதில் தீவிரம் காட்டுகின்றனர். பாகிஸ்தான் பகுதியில் இச்செயலுக்குப் பொறுப்பானவர் கைது செய்யப் பட்டுள்ளார். நாமும் குற்ற வாளிகளை அடையாளம் கண்டுள்ளோம். அவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கி யுள்ளன.
ரஜவுரி, பூஞ்ச் பகுதிகளில் போதை மருந்துக் கடத்தல் சம்பவங்கள் நடைபெறுகின்றன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.