காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனக்கு ரூ. 9.28 கோடி அளவுக்கு சொத்து இருப்பதாக வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார்.
ரே பரேலி தொகுதியில் போட்டியிடும் சோனியா காந்தி தனக்கு ரூ. 2.81 கோடி மதிப்பில் அசையும் சொத்துகளும், ரூ. 6.47 கோடி மதிப்பில் அசையா சொத்துகளும் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2009-ம் ஆண்டு வேட்பு மனு தாக்கலின் போது, சோனியா தனக்கு ரூ. 1.37 கோடி அளவுக்கு சொத்து மதிப்பு இருப்பதாகத் தெரிவித்து இருந்தார். அதன்படி பார்த்தால் தற்போது ஏறக்குறைய 6 மடங்கு சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது.
கடந்த முறை சோனியா வழி காட்டு மதிப்பை மட்டும் தெரிவித்தார் எனவும், தற்போது சொத்துகளின் சந்தை மதிப்பைத் தெரிவித்துள்ளார் எனவும் காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர். தன் மகன் ராகுல் காந்திக்கு சோனியா ரூ. 9 லட்சம் கடன் கொடுத்துள்ளார். 2012-13-ம் ஆண்டு வருமான வரித் தாக்கலில் தனக்கு ரூ. 14.21 லட்சத்துக்கும் அதிகமாக வருவாய் வருவதாகக் குறிப் பிட்டுள்ளார்.
அசையும் சொத்துகளில் கையிருப்பு ரொக்கம் ரூ. 85 ஆயிரம், வங்கிகளில் ரூ. 66 லட்சம், பங்குப் பத்திரம் மற்றும் முதலீடாக ரூ.1.90 லட்சம் உள்ளது. மியூச்சுவல் பண்டில் ரூ. 82.20 லட்சம் முதலீடு செய்துள்ளார்.
சேமநலநிதியாக ரூ. 42.49 லட்சம், தேசிய சேமிப்புத் திட்டத்தில் ரூ. 2.86 லட்சம், நகைகள் ரூ. 62 லட்சம் உள்ளன.
இத்தாலியில் ரூ.19.90 மூதாதை யர் வழி சொத்து, தெராமண்டி கிராமத்தில் ரூ.4.86 கோடிக்கு நிலம், சுல்தான்பூர் கிராமத்தில் ரூ. 1.40 கோடிக்கு நிலம் உள்ளது என வேட்புமனுவில் சோனியா தெரிவித்துள்ளார்.