நகரங்களில் அதிகரித்து வரும் மாசு குறித்து கருத்து கூறிய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர், ‘தூய காற்று என்பது பிறப்புரிமை’ என்று கூறியுள்ளார்.
டெல்லியில் மட்டுமல்லாது நாட்டில் பல்வேறு நகரங்களும் வாகனப்புகை உள்ளிட்ட மாசுகளினால் திக்கித் திணறி வருகிறது. இதற்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.
“தூய காற்று என்பது பிறப்புரிமை. சுற்றுச்சூழல் மாசுப் பிரச்சினைகளுக்கு எதிரான சீரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றார் ஜவடேகர்.
மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது அவர் பதில் அளிக்கையில், “டெல்லியில் காற்றில் மாசின் அளவு அதிகரித்து வருவது கவலையளிப்பதாக உள்ளது, குறிப்பாக வாகனப்புகையைக் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
நாட்டின் காற்றுத் தூய்மையை கட்டுப்பாட்டில் வைக்க புற உதவிகள் எதுவும் தேவையில்லை. அது போன்ற திட்டங்கள் எதுவும் அரசிடம் இல்லை.” என்றார் ஜவடேகர்.