தெலங்கானா எம்.பி. விவேகானந்த், தெலங்கானா ராஷ்டிர சமிதி (டி.ஆர்.எஸ்) கட்சியை விட்டு விலகி மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
ஆந்திர மாநிலத்தின் பெட்டபள்ளி தொகுதி காங்கிரஸ் எம்.பி.யான ஜி.விவேகானந்த் கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் 2-ம் தேதி, காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி டி.ஆர்.எஸ். கட்சியில் இணைந்தார். அக்கட்சித் தலைவர் சந்திரசேகர ராவின் நம்பிக்கைக்குரியவராக இருந்தார். தெலங்கானா மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, டெல்லியில் பல்வேறு கட்சித் தலைவர்களை சந்திரசேகர ராவ் சந்தித்தார். அப்போது விவேகானந்த் உடனிருந்தார்.
இந்நிலையில் விவேகானந்த் நேற்று டி.ஆர்.எஸ். கட்சியை விட்டுவிலகி மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்த அவர், பின்னர் நிருபர்களிடம் கூறுகை யில், “நான் காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கு சோனியா மகிழ்ச்சி தெரிவித்தார். தெலங்கானாவில் காங்கிரஸ் மீண்டும் முன்னிலை பெறுவதற்கு நாங்கள் பாடுபடு வோம் என அவரிடம் உறுதி அளித்தோம்” என்றார்.
அவர் மேலும் கூறுகையில், “எனக்கும் சந்திரசேகர ராவுக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. காங்கிரஸுடன் டி.ஆர்.எஸ். இணையும் அல்லது இரு கட்சிகளிடையே கூட்டணி உருவாகும் என எதிர்பார்த்தேன். ஆனால் அவ்வாறு நடக்க வில்லை. தொகுதிப் பங்கீடு மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பாக சுமுக உடன்பாடு ஏற்படாததே இதற்கு காரணம்” என்றார் விவேகானந்த்.