இந்தியா

பெங்களூரு மருத்துவமனையில் கேஜ்ரிவால் அனுமதி: இயற்கை முறைப்படி 10 நாட்கள் சிகிச்சை

இரா.வினோத்

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இயற்கை முறைப்படி சிகிச்சை பெறுவதற்காக பெங்களூரு வந்துள்ளார். அங்குள்ள ஜிந்தால் மருத்துவமனையில் அவர் 10 நாட்கள் தங்கி சிகிச்சை பெறவுள்ளார்.

நேற்று பிற்பகல் பெங்களூரு வந்த அவர், விமான நிலையத்தில் குவிந்திருந்த ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகளுடன் சிறிது நேரம் உரையாடினார். அதன் பிறகு ஜிந்தால் மருத்துவமனைக்கு சென்றார்.

இது தொடர்பாக ஜிந்தால் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் பாபினா நந்தகுமாரிடம் பேசிய போது, கேஜ்ரிவால் வருகிற 15-ம் தேதி வரை இங்கு த‌ங்கி சிகிச்சைப் பெறுகிறார். ‘கூடு' (நெஸ்ட்) என அழைக்கப்படும் சிறப்பு சிகிச்சை அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

தினமும் காலை 5.30 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை அவருக்கு இயற்கை முறைப்படி (நேச்சுரோபதி) சிகிச்சை அளிக்கப்படும். இதனைத் தொடர்ந்து டிடாக்ஸிஃபிகேஷன், ஹைட்ரோ தெரபி, யோகாசனம், மேனிபுலேட்டிவ் தெரபி, அக்குபிரசர், பிசியொதெரபி, டயட் தெரபி, நடைப்பயிற்சி, மண் குளியல், மூலிகை ஆவி பிடித்தல், எண்ணெய் மசாஜ் போன்ற இயற்கை முறையிலான சிகிச்சை அளிக்கப்படும்.

கேஜ்ரிவால் கடும் மனஅழுத்தம், வறட்டு இருமல், சுவாசப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருப்பதாக அவரது குடும்ப மருத்துவர் விபின் மிட்டல் தெரிவித்தார். மேலும் அவரது உடலில் சர்க்கரையின் அளவு 300-ஐ தாண்டியுள்ளது. அதற்கும் மருந்தில்லா மருத்துவம் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மருந்து, மாத்திரைகள் இல்லாமல் ரூ 20-ல் இருந்து மருத்துவ சேவை வழங்குவதால் வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் நோயாளிகள் வருகின்றனர். இங்குள்ள இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுச்சூழலே நோயாளியின் பாதி நோயை குணப்படுத்தி விடும்' என்றார்.

ஹசாரேவின் அறிவுரை

2012-ம் ஆண்டு தொடர் உண்ணாவிரதத்தில் பங்கேற்றதால் அண்ணா ஹசாரேவின் உடல் மிகவும் நலிவுற்றது. இதையடுத்து அவர் ஜிந்தால் மருத்துவமனைக்கு வந்து சில நாட்கள் தங்கி இயற்கை முறையில் சிகிச்சை பெற்று விரைவில் பூரணமாக குணமடைந்தார். இப்போது அவரது அறிவுரையின் பேரில் கேஜ்ரிவால் பெங்களூரு வந்துள்ளார்.

SCROLL FOR NEXT