‘‘சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே, அதிர்ஷ்டத்தைக் கொண்டு வருபவராக அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் கருதுகின்றன. அவரைப் பயன்படுத்தி நாட்டின் வளர்ச்சிப் பணிகளுக்கு முட்டுக்கட்டை போடுகின்றன’’ என்று மத்தியப் பிரதேச பாஜக குற்றம் சாட்டி உள்ளது.
இதுகுறித்து ம.பி. பாஜக.வின் மாத இதழான ‘சரய்வேதி’யில் அதன் ஆசிரியர் ஜெய்ராம் சுக்லா எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது:
அண்ணா ஹசாரே நேர்மை யான மனிதர்தான். ஆனால், வெளிநாடுகளில் இருந்து நிதி பெறும் பல அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், ஹசாரேவை அதிர்ஷ்டக்காரராக கருதுகின்றன. நாட்டின் வளர்ச்சிப் பணிகளுக்கு முட்டுக்கட்டை போடுவதற்கு ஹசாரேவைப் பயன்படுத்திக கொள்கின்றன. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நம் நாடு முன்னேற்றத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இதைத் தடுக்க ஹசாரே தலைமையிலான கும்பலுக்கு வெளிநாட்டு சக்திகள் நிதியுதவி செய்வதற்கு வாய்ப்புள்ளது.
‘இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள்’ ஸ்லோகனை மோடி அறிவித்துள்ளார். நாடு இதை ஏற்றுக் கொள்வதாய் இருந்தால், உலகளவில் போட்டியைச் சமாளிக்க அந்நிய முதலீடு வேண்டும். புதிய தொழிற்சாலை கள் அமைக்க நிலம் வேண்டும். இந்த வளர்ச்சிக்கு தோராயமாக நாட்டில் உள்ள 0.0001 சதவீத நிலம்தான் தேவைப்படுகிறது. அதை மட்டும்தான் கையகப்படுத்த அரசு நினைக்கிறது.
வனப்பகுதிகளில் இருந்து பழங்குடியின மக்களை வெளியேற் றியது காங்கிரஸ் அரசுதான். வனப் பகுதிகளில் பல கிராமங்களைக் காங்கிரஸ் கட்சி அழித்து விட்டது. இப்போது காங்கிரஸ் கட்சி கண்ணீர் வடிக்கிறது.
இவ்வாறு கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.