இந்தியா

ஆந்திரத்தில் காங்கிரஸை ‘கை’ விட்ட 73 எம்.எல்.ஏ.க்கள்

என்.மகேஷ் குமார்

ஆந்திரப் பிரதேச மாநிலம் பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து காங்கிரஸின் செல்வாக்கு குறைந்துவிட்டதாகக் கருதும் அக்கட்சியின் 73 எம்.எல்.ஏ.க்கள் பிற கட்சிகளில் சேர்ந்துவிட்டனர்.

ஆந்திரப் பிரதேசத்தைப் பிரித்து தெலங்கானா தனி மாநிலம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நடவடிக்கைக்கு ராயல சீமா, கடலோர ஆந்திரப் பிரதேசம் பகுதிகளில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக காங்கிரஸ் கட்சி மீது மக்களுக்கு கடும் அதிருப்தி ஏற்பட்டது.

இதனால், அங்கு காங்கிரஸ் கட்சி தனது செல்வாக்கை இழந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதை நிரூபிக்கும் வகையில் தற்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களாக உள்ள 73 பேர், அக்கட்சியை விட்டு விலகியுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என்று கூறப்படுகிறது.

தெலங்கானா தனி மாநிலக் கோரிக்கை தீவிரமடைந்ததை அடுத்து, மத்திய அரசு பல்வேறு குழுக்களை அமைத்து அது தொடர்பாக ஆய்வு செய்தது. இறுதியில் தெலங்கானா மசோ தாவை நாடாளுமன்றத்தில் நிறை வேற்றியது.

மத்திய அரசின் இந்த நடவடிக் கைக்கு தெலங்கானா பகுதியில் மிகுந்த வரவேற்பும், சீமாந்திரா பகுதியில் கடும் எதிர்ப்பும் கிடைத்தது.

சீமாந்திரா பகுதியில் காங்கிரஸ் தனது செல்வாக்கை இழந்துவிட்டது என்றே கூறலாம். அந்த அளவிற்கு அங்கு அக்கட்சியின் நிலைமை மோசமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்போது நடைபெறும் மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் காங்கி ரஸ் கட்சிக்கு போதிய வாக்குகள் கிடைக்காது எனக் கருதும், அக்கட்சியின் தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் பலர் கட்சி தாவ முடிவு செய்துவிட்டனர். இதுவரை 73 பேர் பிற கட்சிகளில் இணைந்துள்ளனர். இதில் 33 பேர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸிலும், 27 பேர் தெலுங்கு தேசம் கட்சியிலும், 4 பேர் தெலங்கானா ராஷ்டிர சமிதியிலும் இணைந்துள்ளனர். இதில், திங்கட்கிழமை, தெலங்கானா ராஷ்டிர கட்சியில் இணைந்த இருவர் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

கடந்த மாதம் 30-ம் தேதி மாநிலம் முழுவதும் நகராட்சி, மாநகராட்சி தேர்தல்கள் நடைபெற்றன.

இதன் முடிவுகள் வரும் 9-ம் தேதி அறிவிக்கப்படும். இதில் காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் குறைவான இடங்கள் கிடைத்தால், மேலும் பலர் அக்கட்சியிலிருந்து விலகி பிற கட்சிகளில் சேர்வார்கள் எனக் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT