மேற்குவங்கத்தில் கன்னியாஸ்திரி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 8 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
நாடியா மாவட்டத்தைச் சேர்ந்த கங்னாபூரில் 2 நாட்களுக்கு முன்னர் கொள்ளை கும்பல் ஒன்று 72 வயது கன்னியாஸ்திரியைப் பலாத்காரம் செய்தது. கன்னியாஸ்திரிகள் தங்கி யிருந்த கான்வென்ட்டில் இருந்து ரூ.12 லட்சத்தையும் அந்த கும்பல் கொள்ளையடித்து சென்றது. இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து சிஐடி விசாரணைக்கு முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டார். இந்நிலையில் பலாத்காரம் தொடர்பாக 8 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர். இதுகுறித்து நாடியா மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் அர்னாப் கோஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘கன்னியாஸ்திரி பலாத்காரம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 8 பேரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. மற்ற குற்றவாளிகளையும் பிடிக்க மாவட்டம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது’’ என்றார்.
பாதிக்கப்பட்ட ‘ஜீசஸ், மேரி கான்வென்ட்’ பள்ளியின் தலைமை கன்னியாஸ்திரிக்கு, ரனாகாட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தற்போது அவர் இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மேற்குவங்க ஆளுநர் கே.என்.திரிபாதி கூறுகையில், ‘‘குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்ற குற்றவாளிகளைப் பிடிக்க பொது மக்களும் உதவி செய்ய வேண்டும். எந்த மதத்தையும் யாரும் அவமானப்படுத்த கூடாது’’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காங்கிரஸ் கண்டனம்
கன்னியாஸ்திரி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்துக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் பி.சி.சாக்கோ கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக டெல்லியில் நிருபர்களிடம் நேற்று அவர் கூறியதாவது:
பலாத்காரத்துக்கு காரணமான குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை தரப்படவேண்டும். நிலைமையின் தீவிரத்துக்கு ஏற்ப மத்திய அரசும் மாநில அரசும் செயல்படவில்லை. எவ்வளவோ குறைபாடுகள் இருப்பது இந்த சம்பவம் மூலம் தெரிகிறது. சமூக விரோத சக்திகளை உடனடியாக கைது செய்து தண்டனை வழங்கவேண்டும் என்றார்.
மகளிர் ஆணையம் புகார்
கன்னியாஸ்திரி பணிபுரியும் கான்வென்டுக்கு சில காலமாகவே மிரட்டல் வந்தது தெரிந்தும் போலீஸார் நடவடிக்கை எடுக்காமல் பாராமுகம் காட்டி வந்ததாக மேற்கு வங்க மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஒரு வாரத்துக்கு முன் இந்த கான்வென்டுக்கு வந்த சிலர் கன்னியாஸ்திரி ஒருவரை பார்த்து கொலைசெய்வேன் என மிரட்டி இருக்கிறார்கள். இதுபற்றி புகார் தெரிவித்தும் போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை.
இது தொடர்பாக விசாரித்து, சம்பந்தப்பட்ட போலீஸார் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி பரிந்துரைக்கப்படும் என மகளிர்ஆணைய தலைவி சுனந்தா முகர்ஜி கூறினார். இந்நிலையில் கன்னியாஸ்திரி பலாத்காரம் செய்யப்பட்டபோது அங்கு கேமராவில் பதிவான குற்றவாளிகள் 4 பேரின் படங்களை போலீஸார் வெளியிட்டுள்ளனர். அவர்கள் பற்றி தகவல் தந்தால் ரூ.1 லட்சம் வெகுமதி தரப்படும் என்று போலீஸார் அறிவித்துள்ளனர்.