பெங்களூரு ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே.ரவி மர்ம மரணம் தொடர்பான உண்மையை கர்நாடக மாநில அரசு மூடி மறைப்பதாக மக்களவையில் பாஜக குற்றம்சாட்டியது.
கர்நாடக மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரி திங்கள்கிழமை மர்மமான முறையில் அவரது வீட்டில் இறந்து கிடந்தார். அவரது மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி பொதுமக்கள், கர்நாடக எதிர்க்கட்சிகள், பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்துவரும் நிலையில், இவ்விவகாரம் இன்று மக்களவையிலும் எதிரொலித்தது.
மக்களவையில் பேசிய கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி. பிரஹலாத் ஜோஷி, "ஐ.ஏ.எஸ். அதிகாரி ரவி தற்கொலை செய்து கொள்ளவில்லை. அது கொலை. ஆனால், இவ்விவகாரத்தில் கர்நாடக மாநில அரசு உணமையை மறைக்கிறது. ரியல் எஸ்டேட் முறைகேடுகளுக்கு எதிராக ரவி நடவடிக்கை எடுத்த காரணத்தாலேயே அவர் கொலை செய்யப்பட்டார். அவர் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்" என்றார்.
இதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அவையில் சலசலப்பு ஏற்பட்டது.
அப்போது குறுக்கிட்ட மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "இவ்விவகாரம் தொடர்பாக கர்நாடக மாநில முதல்வருடன் தொடர்பில் இருக்கிறேன். இரண்டு நாட்களுக்கு மத்திய அரசுக்கு விரிவான அறிக்கை அளிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இன்றைய கூட்டத்தொடருக்கு முன்னதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் என்னை சந்தித்து, ரவி மரணத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரினர். சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் இதே கோரிக்கையை முன்வைத்தனர். மாநில அரசு விரும்பினால், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடத் தயார்" என்றார்.
ஆனால், ராஜ்நாத் விளக்கத்தை ஏற்காமல் காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து பாஜகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, அவையை 15 நிமிடங்களுக்கு ஒத்திவைத்து சுமித்ரா மகாஜன் ஒத்திவைத்தார்.