சூரியநெல்லி பாலியல் பலாத்கார வழக்கில் முதன்மை குற்றவாளி தர்மராஜனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கேரள உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 23 பேருக்கு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
நீதிபதிகள் கே.டி.சங்கரன், எம்.எல். ஜோசப் பிரான்சிஸ் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது.
1996 ஜனவரி 16-ம் தேதி கேரள மாநிலம் சூரியநெல்லி கிராமத் தைச் சேர்ந்த 15 வயது சிறுமி இடுக்கி யைச் சேர்ந்த பஸ் நடத்துநர் ராஜு என்பவரால் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
பின்னர் அந்த சிறுமி தர்மராஜன் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர் அந்தச் சிறுமியை மிரட்டி கேரளம் மற்றும் தமிழகத்தின் பல் வேறு இடங்களுக்கு வலுக்கட்டாய மாக அழைத்துச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்தினார். சுமார் 40 நாள்களில் அந்தச் சிறுமி பல்வேறு நபர்களால் பலாத்காரம் செய்யப்பட்டார். சிறுமியின் உடல் நலம் குன்றியதால் 1996 பிப்ரவரி 26-ல் அவர் விடுவிக்கப்பட்டார்.
இந்த கொடூர சம்பவம் தொடர்பாக 36 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை கோட்டயம் சிறப்பு நீதிமன்றம் விசாரித்து 36 பேருக்கும் 10 ஆண்டுகள் முதல் 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதில் தர்மராஜனை தவிர்த்து இதர அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து கேரள அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கேரள உயர் நீதிமன்றம் வழக்கை மீண்டும் விசாரித்தது.
வழக்கு விசாரணையின்போது 5 பேர் உயிரிழந்தனர். 7 பேர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் சம்பவம் நடந்து 18 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.
முதல் குற்றவாளியான பஸ் நடத்துநர் ராஜு, 2-வது குற்றவாளி உஷா ஆகியோருக்கு தலா 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. முதன்மை குற்றவாளியான தர்மராஜனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
மற்றவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் முதல் 13 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.