திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் ரகசிய அறைகளில் இருந்து 266 கிலோ தங்க நகைகள் மாயமான சம்பவம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் தலைமை கணக்காயரும், இந்திய கணக்காளருமான வினோத் ராய் தலைமையில் பத்மநாபசுவாமி கோயிலில் சமீபத்தில் நடைபெற்ற தணிக்கை குறித்த அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் கடந்த 3-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.
அந்த அறிக்கையின் முக்கிய சாராம்சம்:
'' பத்மநாபசுவாமி கோயிலில் இருந்து 266 கிலோ தங்கம் மாயமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயிலில் 82 முறை திருட்டு நடைபெற்றுள்ளது.
கோயில் பணிக்காக மட்டும் 893.44 கிலோ தங்கம் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் 627 கிலோ தங்கம் மட்டுமே மீண்டும் திரும்பி உள்ளது. 266 கிலோ தங்கம் காணவில்லை. தற்போதைய விலை நிலவரப்படி ரூபா 89.90 கோடி தங்கம் காணவில்லை'' என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளில் கோயிலில் இருந்து பல்வேறு காரணங்களுக்காக வெளியே கொடுக்கப்பட்ட தங்கத்தில், 266 கிலோ மாயமாகி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.