டெல்லி சட்டப்பேரவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 70 எம்எல்ஏக்களில் 34 சதவீதம் பேர் மீது கிரிமினல் வழக்குகள் பதிவாகி உள்ளன. ஆனால், இவை கொலை, கொள்ளை, பலாத்காரம் போன்ற மோசமான வழக்குகள் கிடையாது என ஜனநாயக சீர்திருத்த சங்கத்தின் தேர்தல் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2008, 2013, 2015-ம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல்களில் முறையே 43, 36, 34 சதவீத எம்.எல்.ஏக்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவாகி உள்ளன.
2015-ம் ஆண்டு சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீது கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் போன்ற மிகவும் மோசமான கிரிமினல் வழக்குகள் எதுவும் பதிவாகவில்லை. டெல்லியில் போட்டியிட்ட 673 வேட்பாளர்களில் 91 பேர் மீது கிரிமினல் வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில் 60 பேர் தீவிர கிரிமினல் வழக்குகளில் சிக்கியுள்ளனர். அதிகமாக பாரதிய ஜனதாவில் 26, காங்கிரஸ் 21, பகுஜன் சமாஜ் கட்சியில் 12 மற்றும் ஆம் ஆத்மியில் ஒருவர் மீது தீவிர கிரிமினல் வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த 60 பேரும் தேர்தலில் வெற்றி பெறவில்லை.
கோடீஸ்வரர்கள் விவரம்
எம்.எல்.ஏக்களில் 44 பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். கடந்த முறை 51 பேர் கோடீஸ்வரர்களாக இருந்தனர். புதியவர்களில் ஆம் ஆத்மி கட்சியின் 4 எம்.எல்.ஏக்கள் ரூ. 10 கோடிக்கும் அதிகமான சொத்துகள் கொண்டவர்களாக உள்ளனர்.
இதில், ஆர்.கே.புரம் தொகுதியில் வெற்றி பெற்றுள்ள பிரமிளா தோக்காவிடம் மிகவும் அதிகமாக ரூ. 73 கோடியே 76 லட்சம் மதிப்புள்ள சொத்துகள் உள்ளன.
கல்வித் தகுதி
ஆம் ஆத்மியின் 67 எம்.எல்.ஏக்களில் ஒருவர் ஐந்தாம் வகுப்பும், 4 பேர் எட்டாம் வகுப்பும், 6 பேர் பத்தாம் வகுப்பும், 12 பேர் பிளஸ் டூ வரையும், 15 பேர் பட்டப்படிப்பும், 7 பேர் தொழில் கல்வியில் பட்டப்படிப்பு, 19 பேர் பட்டமேற்படிப்பும், 3 பேர் மற்ற கல்வியறிவு பெற்றவர்களாகவும் உள்ளனர்.
பெண் வேட்பாளர்கள்
இந்த முறை பெண் வேட்பாளர்கள் 66 பேர் போட்டியிட்டனர். அதில், 6 பேர் வெற்றி பெற்றனர். இவர்கள் அனைவருமே ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர்கள். 2013-ம் ஆண்டு 71 பெண்கள் போட்டியிட்டு, அதில் மூவர் மட்டுமே வென்றிருந்தனர்.