ராகுல் எங்கிருக்கிறார் என்று டிவிட்டரில் ஹேஷ்டேக் இட்டு விமர்சனங்கள் கிளம்பியபோதும்கூட மவுனம் கலைக்காத காங்கிரஸ் தற்போது 'உத்தராகண்ட் போட்டோக்கள் எல்லாம் பிரியங்கா ஆதரவாளர் ஒருவர் வெளியிட்டவை' என விளக்கமளித்துள்ளது.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி வெளிநாட்டுக்கு செல்லவில்லை என கூறிய காங்கிரஸ் பிரமுகர் ஜகதீஷ் ஷர்மா, அதற்கு சாட்சியாக அவர் உத்தராகண்டில் இருப்பது போன்ற படங்களை வெளியிட்டிருந்தார். ஆனால் அந்தப் படங்கள் சொல்லும் செய்தியில் உண்மையில்லை என்று காங்கிரஸ் விளக்கம் தந்துள்ளது.
தனியார் தொலைக்காட்சி சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் செவ்வாய்க்கிழமை கலந்துகொண்ட காங்கிரஸ் பிரமுகர் ஜகதீஷ் ஷர்மா, ராகுல் காந்தி வெளிநாட்டுக்குச் சென்றதாக கூறப்படுவதில் உண்மை இல்லை என்றும், உத்தராகண்டில் உள்ள அவர் நான்கு அல்லது ஐந்து நாட்கள் தங்குவார் என்றும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து ஜகதீஷ் ஷர்மா தனது ட்விட்டர் பக்கத்தில், ராகுல் காந்தி உத்தராகண்டில் இருப்பதாக 6 படங்களையும் வெளியிட்டார்.
மேலும், ட்விட்டரில் இரண்டாவது நாளாக இடம்பெற்றிருக்கும் #RahulOnLeave என்ற ஹேஷ்டேகில், "ராகுல் காந்தி இல்லாத நிலை எவ்வாறு இருக்கும் என்பது இப்போதுதான் தெரிகிறது. அவர் இருக்கும்போதைவிட இல்லாதபோது எவ்வளவுப் பெரிய தாக்கம் ஏற்படுகிறது" என்றும் குறிப்பிட்டுள்ளார் .
இதனிடையே, ராகுல் காந்தி விடுப்பில் இருப்பதாக ஏற்கெனவே தெரிவித்த காங்கிரஸ், ஜகதீஷ் ஷர்மா வெளியிட்டிருக்கும் படம் தொடர்பாக கருத்துக் கூற முதலில் காங்கிரஸ் மறுத்துவிட்டது.
பிரச்சினை சமூக வலைத்தளங்களில் எல்லாம் சற்று பெரிதாக பேசப்பட, ட்விட்டரில் வெளியாகி இருக்கும் படங்கள் கடந்த வருடம் ராகுல் காந்தி உத்தராகண்ட் சென்றபோது எடுத்தது என்று காங்கிரஸ் விளக்கமளித்துள்ளது. மேலும் ஜகதீஷ் சர்மா கருத்துகளுக்கும் மறுப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ராகுல் காந்தியின் அலுவலக நிர்வாக தரப்பு 'தி இந்து'விடம் கூறும்போது, "ஜகதீஷ் ஷர்மா வெளியிட்டிருக்கும் படங்கள் அவர் கூறியது போல உண்மையான செய்தியைக் கொண்டது இல்லை. அந்தப் படங்கள் அனைத்தும் கடந்த 2008-ஆம் ஆண்டு ராகுல் காந்தி உத்தராகண்ட் சென்றபோது எடுத்தது" என்று தெரிவித்தார்.
ராகுலின் படங்களை வெளியிட்ட ஜகதீஷ் ஷர்மா, பிரியங்கா ஆதரவு காங்கிரஸ் பிரமுகர் என்று கூறப்படுகிறது.
டெல்லி சட்டப் பேரவை தேர்தல் தோல்விக்கு பின்னர் காங்கிரஸ் அலுவலம் முன்பு, கட்சியை பிரியங்கா வழிநடத்த வேண்டும் என்ற போராட்டம் நடத்தியவர்களுள் இருவரும் ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.
அவரிடம் இது குறித்து கேட்டபோது, "ராகுல் காந்தியை அவதூறாக பேசுவதை என்னால் ஏற்க முடியவில்லை. அதனால்தான் அப்படி செய்தேன். ராகுல் இருக்கும் இடத்தை தலைவர்கள் ஏன் மறைக்க வேண்டும் என்று தெரியவில்லை. நான் சாதாரண தொண்டன். நான் உண்மையை மறைக்க வேண்டிய அவசியமில்லை" என்றார்.
இந்தப் படம் பகிரப்பட்டதுக்கும் காங்கிரஸுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பி.சி.சாக்கோவும் தெரிவித்துள்ளார்.