ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் நடைபெற்றுவரும் FITUR 2015 எனும் ஐந்துநாள் ஐரோப்பிய சுற்றுலா வர்த்தகக் கண்காட்சியில் இந்தியாவிலிருந்து சென்ற கேரள மாநில அரங்கம் கடந்த ஞாயிறு அன்று பலரையும் கவர்ந்திழுத்துள்ளது.
கண்காட்சியில் இடம்பெற்றுள்ள கேரள சுற்றுலாத் துறையின் பரந்துவிரிந்த அரங்கில் கேரளாவின் 'அழகான கழிமுகங்கள்' மறுஉருவாக்கம் செய்யப்பட்டிருந்தன. ஏற்கெனவே ஒருமுறை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தியா வருகை தந்தபோது கேரளாவின் கழிமுகங்கள் குறித்து பாராட்டியுள்ளார்.
இந்த அரங்கம் ஆயுர்வேத இல்லம் என்ற கருவை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இதில், கேரள மாநிலத்தின் பல்வேறு சிறப்பம்சங்கள் மினியேச்சராக வடிவமைக்கப்பட்டுள்ளது. சுந்தன்வல்லம் காட்சியும் இதில் இடம்பெற்றுள்ளது. அதில் மரப்பாலமும் அதன்கீழே தண்ணீர் ஓட்டமும் அழகாக வடிவமைக்கப்பட்டு கண்ணுக்கினிய கழிமுகத்தை கண்முன்கொண்டுவந்துள்ளது. மரச்சக்கரத்தை கையால் சுற்றி ஆற்றிலிருந்து தண்ணீரை விவசாயத்திற்குப் பாய்ச்சும் சித்திரிப்புகளும் இதில் அமைக்கப்பட்டுள்ளன.
கேரளாவை நினைவுகூரும் விதமாக பாரம்பரிய லாந்தர் விளக்குகள் அரங்கத்தில் தொங்கவிடப்பட்டிருந்தன. இதுகுறித்து கேரளாவின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஏ.பி.அனில்குமார் கூறியபோது, ”மாட்ரிட் உலக சுற்றுலா வர்த்தக கண்காட்சியில் கலந்துகொண்ட சுற்றுலாத் தொழிலைச் சார்ந்தவர்களும் பொதுமக்களும் எல்லோரும் நன்கு அறிந்த கேரளாவின் கழிமுக அழகையும் பெரிய அளவில் திரண்டுவந்து ரசித்தனர். கேரளாவின் மிகப்பெரிய இந்த கழிமுகப் பகுதிகள், கிரேட் பேரியர் ரீப் மற்றும் கிராண்ட் கன்யோன் ஆகியவற்றோடு சேர்த்து ஒற்றை எண்ணிக்கையில் மட்டுமே இருக்கக்கூடிய உலகின் பெரிய கழிமுகப் பகுதிகளில் ஒன்றாக சிறப்புப் பெற்றுள்ளது” என்றார்.
சுற்றுலாத் துறையின் செயலர் ஜி.கமலா வர்த்தனா ராவ் கூறும்போது, ”இந்தக் கழிமுகப்பகுதிகள் கேரளாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் சாளரமாக விளங்குகிறது என்றார். கண்காட்சியில் இடம்பெற்ற கேரள அரங்கின் மாநில பிரதிநிதியாக வந்திருந்த சுற்றுலாத் துறை இயக்குநர் ஷேக் பரீத் அரங்கிற்கு கிடைத்த பிரமாண்ட வரவேற்பினால் நாங்கள் கவுரவிக்கப்பட்டுவிட்டோம். இந்த ஆண்டில் மேலும் நிறைய ஐரோப்பிய சுற்றுலாப்பயணிகளை கவர்ந்திழுக்க முடியும் என்ற நம்பிக்கை எங்கள் சுற்றுலாத்துறைக்கு ஏற்பட்டுள்ளது.” என்றார்.