இந்தியா

புதிய நிதியாண்டுக்கான வரவு செலவு கணக்கை தாக்கல் செய்ய மார்ச் வரை அவகாசம் வேண்டும்: ஒழுங்குமுறை ஆணையத்தில் மின் வாரியம் மனு

ஹெச்.ஷேக் மைதீன்

ஏப்ரலில் தொடங்கவுள்ள புதிய நிதி ஆண்டுக்கான உத்தேச வரவு செலவு கணக்கு அறிக்கையை தாக்கல் செய்ய, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் தமிழக மின் வாரியம் மார்ச் வரை அவகாசம் கேட்டுள்ளது.

தமிழக மின் வாரியம் கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருகிறது. தற்போதைய நிலவரப்படி, வாரியத்துக்கு சுமார் 75 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு மற்றும் கடன் சுமை உள்ளது. வங்கிகளில் இருந்து புதிய கடன்கள் கிடைப்பதில்லை. மத்திய அரசின் ஊரக மின்மயமாக்கும் கழகம், பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் மற்றும் ஜப்பான் கூட்டுறவு நிதிக் கழகமான ஜைகா ஆகிய ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே தற்போது தமிழக அரசுக்கு உதவி வருகின்றன.

தமிழகம் மட்டுமின்றி நாட்டில் உள்ள அனைத்து மின் விநியோக, உற்பத்தி நிறுவனங்களும் தங்களது ஆண்டு வரவு செலவு உத்தேசக் கணக்கு அறிக்கையை ஒவ்வொரு ஆண்டும், நவம்பருக்குள் மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களில் தாக்கல் செய்ய வேண்டும் என்று ஏற்கெனவே மத்திய மின்சாரத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. வரவு, செலவு நிலைமைக்கேற்ப மின் கட்டணத்தை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

கடந்த 2014-15ம் நிதியாண்டுக்கான உத்தேச நிதிக் கணக்கை, தமிழக மின் வாரியம் நவம்பர் 2013-க்குள் தாக்கல் செய்யவில்லை. ஒழுங்கு முறை ஆணையம் 5 கடிதங்கள் அனுப்பியும் மின் வாரியம் கணக்கு தாக்கல் செய்யவில்லை. இதைத் தொடர்ந்து தீர்ப்பாய உத்தரவுப்படி, ஒழுங்குமுறை ஆணையம் தானாக முன்வந்து மின் கட்டணத்தை உயர்த்தும் அறிவிப்பை மேற்கொண்டது. பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்தி, கட்டணம் உயர்த்தப்பட்டது.

இந்நிலையில், ஏப்ரலில் தொடங்கவுள்ள 2015-16ம் ஆண்டுக்கான நிதிக் கணக்கை, கடந்த நவம்பரில் மின் வாரியம் தாக்கல் செய்திருக்க வேண்டும். அவ்வாறு தாக்கல் செய்யாததால், மீண்டும் மின் வாரியத்துக்கு ஒழுங்குமுறை ஆணையம் வாய்மொழி எச்சரிக்கை விடுத்துள்ளது. கணக்கை தாக்கல் செய்யாவிட்டால், இந்திய மின்சாரச் சட்டம் 142-வது பிரிவின்படி, மின் வாரிய உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப வேண்டியிருக்கும் என்று எச்சரித்துள்ளது.

இதனால், சட்ட ரீதியிலான பிரச்சினைகளைத் தவிர்க்க தமிழக மின் வாரிய அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். பின்னர், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளனர். அதில் ‘வரும் நிதியாண்டுக்கான வரவு செலவு உத்தேச அறிக்கையை மார்ச் இறுதிக்குள் தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்துள்ளதாக மின் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து மின் துறை மற்றும் ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகளிடம் விசாரித்தபோது, ‘‘மின் வாரியம் இந்த முறை சட்டச் சிக்கலை தவிர்ப்பதற்காக, ஒழுங்குமுறை ஆணையத்தில் அவகாசம் கேட்டு மனு செய்துள்ளது. இந்த மனு மீது ஆணைய அதிகாரிகள் விசாரணை நடத்தி அவகாசம் அளிப்பது குறித்து முடிவெடுப்பார்கள்’’ என தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT