டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக பாஜக மூத்த தலைவர்கள் டெல்லியில் நேற்று அவசர ஆலோசனை நடத்தினர். இதில் டெல்லி மாநில பாஜக பொறுப்பாளர் பிரபாத் ஷா, கட்சியின் முதல்வர் வேட்பாளர் கிரண் பேடி, மாநிலத் தலைவர் சதிஷ் உபாத்யாயா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக இல்லை. இதுகுறித்து கூட்டத்தில் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. முன்னதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், கிரண் பேடியை அவரது இல்லத்தில் தனியாக சந்தித்துப் பேசினார். பின்னர் நிருபர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், சட்டப்பேரவைத் தேர்த லில் பாஜக நிச்சயமாக வெற்றி பெறும் என்று தெரிவித்தார்.
கிரண்பேடி கருத்து
தேர்தல் முடிவுகள் குறித்து நேற்றுமுன்தினம் இரவு நிருபர் களுக்கு பேட்டியளித்த கிரண்பேடி, முடிவு எதுவாக இருந்தாலும் அதற்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்று கூறினார். நேற்று அவர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், எல்லா நாளுமே ஒரு புதிய நாள்தான், இன்று டெல்லி மக்களுக்கு எனது இனிய காலை வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.