‘‘இலங்கையில் எல்லா இனத்தவர்களுக்கும் சம நீதி கிடைக்கவும், அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தவும், அதிபர் மைத்ரிபால சிறிசேனா முன்னுரிமை அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று சர்வதேச பொதுமன்னிப்பு கழக இந்திய பிரிவு வலியுறுத்தி உள்ளது.
இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா, 4 நாள் பயணமாக டெல்லி வந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி உட்பட முக்கியத் தலைவர்களை சந்தித்து இருநாட்டு நல்லுறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இதுகுறித்து சர்வதேச பொதுமன்னிப்புக் கழக இந்திய பிரிவு (அம்னஸ்டி இன்டர்நேஷனல் இண்டியா) திட்ட இயக்குநர் ஷமீர் பாபு நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இலங்கையில் சிங்களவர்கள், தமிழர்கள் உட்பட எல்லா இனத்தவர்களும் இணக்கமாக வாழும் சூழ்நிலையை அந்நாட்டு அதிபர் சிறிசேனா ஏற்படுத்த வேண்டும். அவருக்கு இப்போது மிக அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன்மூலம் எல்லோருக்கும் சம நீதி கிடைக்க வழி வகை செய்ய வேண்டும். மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் சீர்திருத்தங்கள், மறுவாழ்வு திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
சுதந்திரம், சம உரிமை, சுயமரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் மறுசீரமைப்புப் பணிகளை சிறிசேனா மேற்கொள்ள வேண்டும். அதிபர் சிறிசேனா அறிவித்துள்ள 100 நாள் சீர்திருத்த திட்டம், மக்களிடம் அதிக நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. மேலும், நீதித் துறை உட்பட முக்கிய துறைகள் சுதந்திரமாக செயல்படுவதற்கு அவர் எடுத்து வரும் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கன. இலங்கையில் வாழும் மக்களிடம் பாரபட்சம் காட்ட கூடாது. பேச்சு சுதந்திரத்தை உறுதிப்படுத்த வேண்டும். இலங்கையில் நீதியை நிலைநாட்டவும், நம்பிக்கையை ஏற்படுத்தவும் சிறிசேனாவுக்கு எல்லா உதவிகளையும் பிரதமர் மோடி செய்ய வேண்டும்.
விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து உள்நாட்டிலேயே விசாரணை நடத்துவோம் என்று சிறிசேனா அறிவித்துள்ளார். அந்த விசாரணை சுதந்திரமான, வெளிப்படையான, உண்மையான, நம்பிக்கையை ஏற்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும். அதேசமயம் இலங்கையில் நடந்த மனித உரிமைகள் குறித்து ஐ.நா. நடத்தி வரும் விசாரணைக்கு சிறிசேனா அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு ஷமீர் பாபு கூறினார்.