எச்.எஸ்.பி.சி. வங்கியின் சுவிட்சர் லாந்து கிளையில் கருப்பு பணம் பதுக்கியுள்ளவர்களின் புதிய பட்டியலை சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு (ஐசிஐஜே) வெளியிட்டுள்ளது.
இதில் சுவிட்சர்லாந்து நாட்டினர் முதலிடத்திலும், 410 கோடி டாலர்கள் (சுமார் ரூ.24,924.34 கோடி) டெபாசிட் தொகையுடன் இந்தியர்கள் 16-வது இடத்திலும் இருப்பது தெரிய வந்துள்ளது.
இந்தப் பட்டியலில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வாடிக்கை யாளர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களின் டெபாசிட் தொகை 10,000 கோடி டாலருக்கும் அதிகமாக உள்ளது. மேலும் இந்தப் பட்டியலில் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற விவரம் இல்லை.
இந்த வங்கியில் பதுக்கப்பட்டுள்ள பணத்தின் அடிப்படையில் சுவிட்சர் லாந்து 3120 கோடி டாலர்களுடன் முதலிடத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து பிரிட்டன், வெனிசுவேலா, அமெரிக்கா, பிரான்ஸ் ஆகியவை முதல் 5 நாடுகள் பட்டியலில் உள்ளன. இதுகுறித்து ஐசிஐஜே கூறும்போது, “எச்எஸ்பிசி வாடிக்கையாளர்கள் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தொடர்புடைய 60 ஆயிரம் கோப்புகளின் அடிப்படையில் இந்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது. எச்எஸ்பிசி வங்கியின் முன்னாள் ஊழியர் ஹெர்வி ஃபால்சியானி இந்த விவரங்களை கடந்த 2008-ம் ஆண்டு பிரான்ஸ் அரசுக்கு கசியவிட்டார். இவர்களிடமிருந்து இந்தப் புள்ளிவிவரங்களை பிரான்ஸின் ‘லு மான்ட்’ நாளேடு பெற்று ஐசிஐஜேயிடம் அளித்தது.
இந்த வங்கி வாடிக்கையாளர் களில் அதிகபட்ச தொகையாக 87.63 கோடி டாலரை (சுமார் ரூ. 5446.68 கோடி) இந்தியாவுடன் தொடர் புடைய ஒருவர் டெபாசிட் செய்துள் ளார். இந்தப் பட்டியலில் 1,688 இந்தியர்களுடன் தொடர்புடையவை. இதில் 1,403 கணக்குகள் 1969 2006-க்கு இடைப்பட்ட காலத்தில் தொடங்கப்பட்டுள்ளன. இந்தியா வுடன் தொடர்புடைய 1,668 வாடிக்கை யாளர்களில் 51 சதவீதம் பேர் இந்தியர் அல்லது இந்திய பாஸ் போர்ட் வைத்திருப்பவர்கள். எஞ்சிய கணக்குகள் சட்டப்பூர்வ வரிவிலக்கு பெற்ற நிறுவனங்கள் அல்லது எண்ணால் மட்டுமே அடையாளம் காணப்படும் கணக்குள் ஆகும்.” என்று தெரிவித்துள்ளது.
புதியது அல்ல: சுவிட்சர்லாந்து
இதுகுறித்து சுவிட்சர்லாந்து அரசின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “தற்போது வெளியாகியுள்ள பட்டியல் 2007 மற்றும் அதற்கு முந்தைய ஆண்டுகளில் வங்கியிலிருந்து திருடப்பட்டு ஏற்கெனவே கசியவிடப்பட்ட புள்ளிவிவரங்களில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. கூடுதல் ஆதாரங்கள் அளிக்கப்படாமல் இந்த கணக்கு விவரங்களை இந்தியா பெறுவது கடினம். சுவிட்சர்லாந்து அரசு 2009 முதல் தனது நிதிச்சந்தை கொள்கையில் மாற்றம் செய்துள்ளது. இதன் அடிப்படையில் வங்கிச் சேவையில் சர்வதேச தரத்தை கடைபிடிப்பதிலும் கருப்பு பணத்துக்கு எதிராக போரிடுவதிலும் நாங்கள் உறுதியாக உள்ளோம்” என்றார்.