கடவுள் நம்மோடு இருக்கிறார் என்று டெல்லியில் கேஜ்ரிவால் இறுதி நாள் பிரச்சாரம் மேற்கொண்ட போது தெரிவித்திருப்பது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
டெல்லி தேர்தல் நெருங்கியுள்ள சூழ்நிலையில் நேற்று இறுதி நாள் பிரச்சாரங்கள் நடைபெற்றன. அப்போது, ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால், 'கடவுள் நம்மோடு இருக்கிறார்' என்று பிரச்சாரம் செய்தார்.
"மகாபாரதத்தில் துரியோதனனிடம் அனைத்து வசதிகளும் இருந்தன. அதேபோல பா.ஜ.க.விடம் அனைத்து அரசாங்க சக்திகளும் உள்ளன. ஆனால், நம் பக்கம் கடவுள் இருக்கிறார்" என்று கேஜ்ரிவால் கூறினார்.
அவரின் இந்த கருத்துக்கு மக்களிடம் வரவேற்பு இருந்தது. அதைத் தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில், "மக்களின் இந்த வரவேற்பை என்னால் நம்ப முடியவில்லை" என்று கூறியிருந்தார்.
தொடர்ந்து, தனது பிரச்சாரத்தில், "கடவுள் நம்மோடு இருப்பதற்குக் காரணம் நாம் உண்மையின் வழியில் செல்கிறோம். ஆனால் மற்றவர்களைத் தாக்குவதே பா.ஜ.க. தனது மதமாகக் கொண்டிருக்கிறது" என்றும் கேஜ்ரிவால் கூறினார்.