மறுமத மாற்றத்தின் மூலம் 15 கோடி மக்களை தாய் மதத்துக்கு திரும்பும்வரை 'கர் வாப்சி' நிகழ்ச்சி தொடரும் என்று விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் உறுப்பினர் சாத்வி ப்ராச்சி ஆர்யா தெரிவித்துள்ளார்.
அலிகாரில் உள்ள ராம்லீலா மைதானத்தில் விஷ்வ இந்து பரிஷத் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிக்கு பின்னர் பேசிய அந்த அமைப்பின் உறுப்பினர் சாத்வி ப்ராச்சி ஆர்யா, "மத மாற்றத்தால் இந்து மக்கள் பலர் வேறு மதத்துக்கு மாற்றப்பட்டனர். அவர்கள் அனைவரையும் தாய் மதத்துக்கு திருப்பி அழைத்து வரும்வரை கர் வாப்சி நிகழ்ச்சி தொடரும். நாட்டில் மற்ற மதத்தினரோடு ஒப்பிடுகையில் இந்துக்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. அதனை சரிசெய்ய வேண்டும் என்பதே எங்களின் எண்ணம்" என்றார்.
மேலும் அவர் கூறும்போது, "தேசத் தந்தை என்ற மதிப்பு மகாத்மா காந்திக்கு தற்காலிகமாக வழங்கப்பட்டதுதான். அது நிரந்தரமானது அல்ல. இந்தியாவின் சுதந்திரத்துக்காக பலர் பாடுப்பட்டனர். தவறுதலாக அதற்கான பெருமையெல்லாம் காந்திக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. அதே மதிப்பு பகத் சிங், வீர் சவர்க்கர் ஆகியோருக்கும் வழங்கப்பட வேண்டும்.
'கர் வாப்சி' பிரச்சாரத்தை செய்து வருவதனால் எனக்கும் எம்.பி. சாக்ஷி மகாராஜுக்கும் தொடர்ந்து அச்சுறுத்தல் வருகிறது. ஆனாலும் நாங்கள் இந்த நல்ல காரியத்தை தொடர்வோம்" என்றார்.