டெல்லி தேர்தலில் பாஜகவின் முதல்வர் வேட்பாளர் கிரண் பேடி, காங்கிரஸ் கட்சியின் அஜய் மக்கான் உட்பட பிற கட்சித் தலைவர்களின் ஆலோசனை களையும் ஏற்போம் என்று இம்மாநில முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் அறித்துள்ளார்.
டெல்லி முதல்வராக பதவி யேற்றபின் திரளான மக்கள் மத்தியில் கேஜ்ரிவால் நேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது, “கிரண்பேடி மீது நான் மிகவும் மரியாதை வைத்திருக்கிறேன்.
தேர்தல்களில் வெற்றி, தோல்வி வழக்கமான ஒன்று. அவர் எனது மூத்த சகோதரியை போன்றவர். காவல் துறை மற்றும் நிர்வாகத்தில் அவர் நீண்ட அனுபவம் கொண்டவர். கிரண்பேடியை உடன் ஏற்று நாம் ஆட்சி செய்வோம். அவ்வப்போது அவரது ஆலோசனைகளையும் கேட்டு பெறுவோம்” என்றார்.
இதேபோல் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாள ராகக் கருதப்பட்டவரும், கட்சியின் தேர்தல் பொறுப்பாளருமான அஜய் மக்கானின் ஆலோசனை களையும் அவ்வப்போது கேட்டுப் பெறுவோம் என்று கேஜ்ரிவால் தனது உரையில் குறிப்பிட்டார். சட்டங்களை உருவாக்குவதிலும், ஆட்சி நிர்வாகத்திலும் மக்கானுக்கு நீண்ட அனுபவம் இருப்பதை கேஜ்ரிவால் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.
இந்த விஷயத்தில் மாற்று கட்சிகள் மீது தனக்கு எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை என்று கூறிய கேஜ்ரிவால், காங்கிரஸ், பாஜக என எந்தக் கட்சியாக இருந்தாலும் அதன் தலைவர்களின் அனுபவத்தை பயன்படுத்திக் கொள்ள இருப் பதாக தெரிவித்தார். இவர்கள் அனைவருடனும் சேர்ந்து ஏழை, பணக்காரர்கள் பெருமிதம் கொள்ளும் வகையில் டெல்லியை ஒரு சிறந்த நகரமாக மேம்படுத்த இருப்பதாக கூறினார்.
இதுகுறித்து அஜய் மக்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது, “ஒரு நல்ல குறிப்புடன் கேஜ்ரிவால் துவக்கியுள்ளார்.
அவருக்கு அனைத் திலும் வெற்றி கிடைக்கவும், அதற்கான அனைத்து ஆதரவு மற்றும் உதவிகளை டெல்லியின் வளர்ச்சிக்காக செய்வேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.