அணு ஆயுதங்களை ஏந்திச் சென்று குறிப்பிட்ட இலக்கைத் தாக்கும் பிருத்வி-2 ஏவுகணை சோதனை நேற்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
ராணுவத்தில் பிருத்வி ஏவுகணைகள் ஏற்கெனவே சேர்க்கப்பட்டுள்ளன. அதன் மேம்படுத்தப்பட்ட பிருத்வி-2 ஏவுகணை முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணையை ராணுவத்தினர் அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் ஒடிஸா மாநிலம் சந்திப்பூர் ஏவுதளத்திலிருந்து நேற்று காலை 9.20 மணிக்கு பிருத்வி-2 ஏவுகணை பரிசோதனை நடத்தப்பட்டது.
தரையிலிருந்து சென்று தரை இலக்கை திட்டமிட்டபடி பிருத்வி-2 ஏவுகணை தாக்கி அழித்ததாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஏவுகணை 350 கி.மீ. தூரம் பாய்ந்து தாக்கும் சக்தி கொண்டது. மேலும், 500 கிலோ முதல் 1000 கிலோ வரை எடை கொண்ட அணு ஆயுதங்கள், வெடிகுண்டுகளை தாங்கிச் சென்று தாக்கும் திறன் படைத்தது.
இதுகுறித்து ராணுவ விஞ்ஞானி ஒருவர் கூறும்போது, “ஏற்கெனவே தயாரித்து வைத்துள்ள ஏவுகணைகளில் இருந்து ஒன்றை தேர்ந்தெடுத்து சோதனை செய்து பார்ப்பது வழக்கம். அதன்படி டிஆர்டிஓ விஞ்ஞானிகள் பிருத்வி-2 ஏவுகணையை சோதனை செய்து பார்த்தனர். சோதனை வெற்றி அடைந்துள்ளது” என்றார்.
இந்திய ராணுவத்தில் கடந்த 2003-ம் ஆண்டில் பிருத்வி-2 ஏவுகணை சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதன்பின் கடைசியாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 14-ம் தேதி இந்த ஏவுகணை பரிசோதனை நடத்தப்பட்டது. அதன்பிறகு நேற்று வெற்றிகரமாக சோதனை நடத்தப்பட்டுள்ளது.