இந்தியா

தேர்தல் நடத்தை விதி மீறியதாக கிரண்பேடி மீது ஆம் ஆத்மி புகார்: வாக்குப் பதிவின்போது பிரச்சாரம் செய்தாரா?

பிடிஐ

‘தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி வாக்காளர்களிடம் பாஜக முதல்வர் வேட்பாளர் கிரண்பேடி வாக்கு சேகரித்தார், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தேர்தல் ஆணையத்தில் ஆம் ஆத்மி கட்சி புகார் தெரிவித்துள்ளது.

டெல்லி சட்டப்பேரவைக்கான வாக்குப் பதிவு நேற்று நடந்தது. அப்போது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பாஜக முதல்வர் வேட்பாளர் கிரண்பேடி நடந்து கொண்டார் என்று தேர்தல் ஆணையத்திடம் ஆம் ஆத்மி புகார் தெரிவித்துள்ளது. இது குறித்து ஆணையத்திடம் ஆம் ஆத்மி அளித்த புகார் கடிதத்தில் கூறியிருப்பதாவது:

டெல்லி கிருஷ்ணா நகர் தொகுதியில் பாஜக முதல்வர் வேட்பாளர் கிரண்பேடி போட்டியிடுகிறார். அவர் வாக்குப் பதிவு நடக்கும்போது தனது தொகுதியில் பாத யாத்திரை சென்று வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்தார். மேலும் 10 இடங்களுக்கு மேல் மோட்டார் வாகனத்தில் 5 கி.மீ. தூரத்துக்குப் பேரணியாகச் சென்று வாக்கு சேகரித்தார். அவருடன் நூற்றுக்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் உடன் சென்றனர். அவர்கள் கைகளில் பிரச்சார துண்டு பிரசுரங்கள் இருந்தன. வாக்காளர்களிடம் கிரண்பேடி பேசி தனக்கு வாக்களிக்கும்படி பிரச்சாரம் செய்தார்.

டெல்லியில் பிரச்சாரம் கடந்த 5-ம் தேதி மாலை 6 மணியுடன் முடிந்து விட்டது. வாக்குப் பதிவு நாளன்று வாக்காளர்களிடம் கிரண்பேடி வாக்கு சேகரித்தது தேர்தல் நடத்தை விதி மீறலாகும். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஆம் ஆத்மி கடிதத்தில் கூறியுள்ளது.

இதற்கிடையில் பல வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு மெதுவாக நடந்ததால், வாக்காளர்கள் பலர் வாக்களிக்காமல் திரும்பிச் சென்றனர். மேலும் சில வாக்குச் சாவடிகளில் விதிகளை மீறி மதிய உணவு இடைவேளையும் விடப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையம் உடனடியாக தலையிட்டு வாக்குப் பதிவை விரைவுப்படுத்த வேண்டும் என்று ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் தனது ட்விட்டரில் கேட்டுக் கொண்டார்.

வாக்குச் சாவடிக்குள் ஒரே நேரத்தில் 3 வாக்காளர்களை அனுமதிக்கலாம். ஆனால் ஒவ்வொரு வாக்காளராக அழைத்து வாக்குப் பதிவு நடத்தியதில் கால தாமதம் ஏற்பட்டது என்று ஆம் ஆத்மி கட்சியினர் புகார் கூறினர்

SCROLL FOR NEXT