இந்தியா

டெல்லியில் கிறிஸ்தவ பள்ளி மீது மர்ம நபர்கள் தாக்குதல்

ஐஏஎன்எஸ்

டெல்லியில் கிறிஸ்தவ பள்ளி மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இன்று அதிகாலை இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

தெற்கு டெல்லியில் வசந்தவிஹார் பகுதியில் உள்ளது ஹோலி ஆக்ஸிலியம் பள்ளி. இந்தப் பள்ளிக்குள் இன்று அதிகாலை நுழைந்த சில மர்ம நபர்கள் பள்ளி முதல்வரின் அறையை சூறையாடியுள்ளனர்.

முன்னதாக, பள்ளி வளாகத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களை அவர்கள் உடைத்து நொறுக்கியுள்ளனர்.

பள்ளிக்கூடம் தாக்கப்பட்டதை, டெல்லி கத்தோலிக்க திருச்சபையின் பாதிரியார் சவரிமுத்து சங்கர் உறுதி செய்துள்ளார்.

பள்ளிக்கூடம் தாக்குதலுக்குள்ளான விஷயம் தெரியவந்தபிறகு பள்ளிக்கு இன்று விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி கூறும்போது, "சம்பவம் குறித்த தகவலறிந்தவுடன் போலீஸ் உயர் அதிகாரிகள் பள்ளி வளாகத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டு தடயங்களை சேகரித்துள்ளனர். மர்ம நபர்கள் சிசிடிவி கேமராக்களை அடித்து நொறுக்குமுன்னர் பதிவான காட்சிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்" என்றார்.

டெல்லியில் சமீப காலமாக தேவாலயங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுவந்தது. குறுகிய கால இடைவெளியில் 5 தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இவ்விவகாரம் உலகளவில் கண்டனத்தை பெற்றுள்ள நிலையில், தற்போது கிறிஸ்தவ பள்ளிக்கூடம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT