ஆவணத் திருட்டு விவகாரத்தில் மத்திய அரசு விவாதத்துக்கு தயாராக இருப்பதாக மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி உறுதியளித்துள்ளார்.
மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிசக்தித் துறை அமைச்சகத்தின் ஆவணங்களை திருடி, தனியார் பெருநிறுவங்களுக்கு விற்பனை செய்ததாக இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து இன்று மாநிலங்களவையில் ராஜ்ய சபா உறுப்பினர் நரேஷ் அகர்வால் கேள்வி எழுப்பினார். அவர் பேசும்போது, "மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களிலும் இருந்து ஆவணங்கள் திருடப்பட்டது தொடர்பாக இளம் நிலை அதிகாரிகளே கைது செய்யப்பட்டுள்ளனர்.
மூத்த அதிகாரிகள் யாரும் இதுவரை சிக்கவில்லை. இது கார்ப்பரேட் பெரும் முதலாளிகளுக்கு ஆதரவாக அரசு செயல்படுவதன் விளைவா? பெரும் தலைகளை காப்பாற்றும் அரசின் முயற்சியா?" என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, "ஆவணத் திருட்டு விவகாரத்தில் மத்திய அரசு விவாதத்துக்கு தயாராக இருக்கிறது" என்றார்.
இதனைத் தொடர்ந்து இவ்விவகாரம் தொடர்பான விவாதத்திற்கு முறைப்படி நோட்டீஸ் அளிக்குமாறு அவை துணைத் தலைவர் ஹமீது அன்சாரி வலியுறுத்தினார்.