நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களுக்கும் ஒரே நுழைவுத்தேர்வு நடத்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் திட்டமிட்டு வருகிறது.
பாஜக தலைமையிலான மத்திய அரசு பதவியேற்ற பிறகு உயர் கல்வி மற்றும் பள்ளிக் கல்விக் காக தனித்தனியே புதிய கல்விக் கொள்கைகளை தயாரித்து வருகிறது.
விரைவில் அறிவிக்கப்படவுள்ள உயர்கல்விக் கொள்கையில், நாட்டில் உள்ள 42 மத்திய பல்கலைக்கழங்களுக்கும் ஒரே நுழைவுத்தேர்வு நடத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. மேலும் இதை வரும் கல்வியாண்டிலேயே நடை முறைப்படுத்த திட்டமிட்டுள்ளது.
இதுபோன்ற நுழைவுத்தேர்வு நாட்டின் உயர்கல்வி நிறுவனங் களான ஐஐடி, ஐஐஎம் ஆகிய இரண்டிலும் பல ஆண்டுகளாக சிறப்பாக நடந்து வருகிறது. இதை எடுத்துக்காட்டாக வைத்து கடந்த ஆட்சியில் நாட்டின் அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்கும் ஒரே நுழைவுத்தேர்வு நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
ஆனால், தமிழ்நாடு, ஆந்திரம் உள்ளிட்ட சில மாநிலங்களில் நடைமுறையில் இருக்கும் அரசு நுழைவுத்தேர்வு காரணமாக அதை முழுமையாக அமல்படுத்த முடியாமல் போனது.
பிறகு மத்திய பல்கலைக் கழகங்களின் மாணவர் சேர்க்கைக் காக பொது நுழைவுத் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டது. அதன் முதல்கட்டமாக, தமிழ்நாடு, பிஹார், ஜார்க்கண்ட், குஜராத், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 10 மத்திய பல்கலைக்கழகங்களில் மட்டும் கடந்த இரு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
எனவே, இதை நாடு முழு வதும் நிறைவேற்றும் வகையி லான ஆலோசனை, கடந்த ஆண்டு இறுதியில் சண்டீகரில் நடந்த அனைத்து மத்திய பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாட்டிலும் நடந்தது. அதன் அடிப்படையில் அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையை கடந்த மாதம் மத்திய அரசிடம் அளித்தது.
இதுகுறித்து மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சக அதிகாரிகள் ‘தி இந்து’விடம் கூறும்போது, “இதில், கூடுதலாக அப்பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களும் பணியிடமாற்றம் செய்துகொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டு வருகிறது. இந்த முயற்சியால் அலிகர் முஸ்லிம், பனாரஸ் இந்து, அலகாபாத், ஜவஹர்லால் நேரு, டெல்லி மற்றும் விஷ்வ பாரதி போன்ற பல்கலைக்கழகங்கள் தங்களின் தனித்துவத்தை இழந்து விடும் என எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த எதிர்ப்புகளை சமாளிக்கும் முயற்சி யும் நடந்து வருகிறது” என்றனர்.