இந்தியா

பாஜகவில் சேரப் போவதாக புகார் எதிரொலி: ஜார்க்கண்டில் மராண்டி கட்சி எம்எல்ஏக்கள் 4 பேர் இடைநீக்கம்

ஆர்.ஷபிமுன்னா

பாஜகவில் சேரப்போவதாக புகார் எழுந்ததால், தனது கட்சி எம்எல்ஏக்கள் 4 பேரை இடைநீக்கம் செய்துள்ளார் ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா (ஜேவிஎம்) கட்சித் தலைவர் பாபுலால் மராண்டி.

ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சி யில் ஜேவிஎம் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மொத்தம் உள்ள 8 பேரில் பிரதீப் யாதவ் மற்றும் பிரகாஷ் ராம் ஆகிய இருவர் மட்டும் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கலந்துகொள்ளாத 6 பேரை அக் கட்சியின் தலைவர் பாபுலால் மராண்டி தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை. இதனால் அவர் களில் 4 பேருக்கு ‘சஸ்பெண்ட்’ செய்வதாகக் கூறி நோட்டீஸ் அனுப்பியுள்ளார் மராண்டி.

பிஹாரிலிருந்து பிரிந்த ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல் முதல்வராக இருந்தவர் பாபுலால் மராண்டி. தனக்கு மீண்டும் முதல்வர் பதவி வழங்காததால், கடந்த 2006-ம் ஆண்டு பாஜகவிலிருந்து வெளியேறி தனியாக ஜேவிஎம் கட்சியைத் தொடங்கினார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து போட்டியிட்ட அவருக்கு 8 தொகுதிகளில் வெற்றி கிடைத்தது. அப்போதிருந்தே கட்சியைக் கலைத்துவிட்டு தங்களுடன் இணையுமாறு பாஜக தொடர்ந்து வற்புறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கு மராண்டி மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், அவரது கட்சியைச் சேர்ந்த 6 எம்எல்ஏக்கள் டெல்லியில் முகாமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா கட்சியினர் ‘தி இந்து’விடம் கூறும்போது, ‘பழங்குடியினத்தவர்கள் அதிகம் கொண்ட மாநிலமான ஜார்க்கண்டில், அந்த சமூகத்தினரின் ஆதரவு எங்களுக்கு உள்ளது. இதனால் பாஜகவுடன் இணைய எதிர்ப்பு கிளம்புகிறது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, எங்கள் கட்சி எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்து கட்சியை உடைக்க பாஜக முயல்கிறது. இது தொடர்பாக பாஜகவுடன் தொடர்பில் உள்ள 4 பேர் தற்காலிகமாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்” என்றனர்.

ஜார்க்கண்டில் மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் அதிகபட்சமாக 37 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக, கூட்டணியில் உள்ள அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்க கட்சியின் 5 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள் ளது.

இதில் ஒருவருக்கு மாநில அமைச்சர் பதவி வழங்கப்பட் டிருந்தாலும், அக்கட்சியின் தலைவர் சுதேஷ் மஹ்தோவுக்கு மத்திய அமைச்சர் பதவி உட்பட மேலும் சில கூடுதல் பதவிகளை தரவேண்டும் என அக்கட்சி மறைமுகமாக வற்புறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது

ஜார்க்கண்டில் உள்ள அரசியல் கட்சிகள் அடிக்கடி அணி தாவுவது வழக்கமாக உள்ளது. இதனால் கட்சி தாவல் சட்டத்தில் சிக்காத வகையில் ஜார்க்கண்ட் மாணவர் சங்க கட்சியின் எம்எல்ஏக்களை, விலைக்கு வாங்க சிபுசோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் தங்களது ஆட்சிக்கு ஏற்படும் ஆபத்தை தவிர்க்க, முதல்வர் ரகுவர் தாஸ், எட்டு எம்எல்ஏக்களை வைத்திருக்கும் பாபுலால் மராண்டியின் கட்சியை பாஜகவுடன் இணைக்க விரும்பி னார். இவர்களுக்காக, அமைச் சரவையை விரிவுபடுத்தாமல் வெறும் நான்கு கேபினேட் அமைச்சர்களுடன் ஆட்சியை தொடர்கிறார் ரகுவர் தாஸ். இந்தப் பிரச்சினையில் பிஹார் மாநிலத்துக்குப் பின் ஜார்க்கண்ட் அரசியலிலும் குழப்பம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT