இந்தியா

முதல்வரை நீக்கி அதிரடி; ‘டம்மி’ முதல்வருக்கு அச்சாரம் இட்ட பிஹார்

ஆர்.ஷபிமுன்னா

அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுவது வழக்கமானது. ஆனால் பிஹாரில் முதன்முறையாக ஆளும் ஐக்கிய ஜனதா தளம் முதல்வரையே கட்சியிலிருந்து நீக்கி உள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளத்துக்கு கிடைத்த தோல்வியின் காரணமாக, பிஹாரின் முதல்வராக இருந்த நிதிஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். தனக்கு நெருக்கமான அமைச்சர் ஜிதன்ராம் மாஞ்சியை (68) 23-வது முதல்வராக பதவியில் அமர்த்தினார்.

எனினும், பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்ட தால் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் பெரும்பான்மையை இழந்தது. இதனால் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், மாஞ்சி தலைமை யிலான புதிய அமைச்சரவை வெற்றி பெற்றது. இதற்கு கடந்த 20 ஆண்டுகளாக முக்கிய எதிர்க்கட்சியாக இருந்த லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவு கைகொடுத்தது.

தாழ்த்தப்பட்டோர் நலத் துறை அமைச்சராக இருந்த ஜிதன் ராம், மாஞ்சி புய்யான் எனும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். இவர் மக்களவை தேர்தலில் கயா தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். கயா மாவட்டத்தில் உள்ள மக்தும்பூர் தொகுதியின் எம்எல்ஏவாக தொடர்ந்து பலமுறை தேர்ந்தெடுக்கப்பட்ட ஜிதன்ராம், ராஷ்டிரிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சியிலும் இருந்தவர்.

மாஞ்சியைப் போல், `டம்மி’ முதல்வரை முதன்முறையாக தேர்தெடுத்த பெருமை பிஹாரையே சேரும். அம்மாநில முதல்வராக இருந்த லாலு, கால்நடைதீவன ஊழல் வழக்கில் சிக்கி 1997-ல் சிறை செல்ல நேர்ந்ததது. இதையடுத்து, அரசியலில் தீர்க்கதரிசியாகக் கருதப்படும் லாலு, நிதிஷ் செய்த தவறை செய்யவில்லை. மாறாக, தனது மனைவி ராப்ரி தேவியை முதல்வராக்கினார். சமையலறை மற்றும் குடும்பப் பொறுப்பு தவிர எதையுமே அறியாதவராகக் கருதப்பட்ட அவரை சிறையில் இருந்தபடியே ஆட்டுவித்தார் லாலு.

ஜாமீனில் வெளியில் வந்த பிறகும் ராப்ரியை முதல்வர் பதவியிலிருந்து அகற்றவில்லை. இதில் லாலுவுக்கு கிடைத்த வெற்றி ஒரு முன் உதாரணத்தை ஏற்படுத்த, அந்த முறை தமிழகத்திலும் செயல்படுத்தப்பட்டது. ஆனால், லாலுவைப் போல் அல்லாமல் உறவுமுறை அல்லாதவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அந்த நடவடிக்கையும் வெற்றி பெற்றது. இதன் அடிப்படையிலேயே, நிதிஷ் தனது உறவினரை விடுத்து, தனக்கு நெருக்கமான மாஞ்சிக்கு முதல்வர் பதவியை அளித்தது பெரும் தவறாகி விட்டது.

தொடக்கம் முதலே நிதிஷால் அமர்த்தப்பட்ட `டம்மி’ முதல்வர் என்றே அழைக்கப்பட்ட மாஞ்சி, முதல் இரண்டு மாதம் மட்டுமே அவரின் கைப்பாவையாக இருந்தார். அதன் பிறகு நிதிஷுக்கு எதிரியாகவே திரும்பிவிட்டார். இதற்கு நிதிஷ் மற்றும் லாலுவின் எம்எல்ஏக்கள் தங்களுக்கு வேண்டியதை செய்து கொள்ள மாஞ்சிக்கு அளித்த நெருக்குதலே காரணம் எனக் கருதப்படுகிறது.

இதை மறுத்த மாஞ்சி, ஏற்கெனவே நிதிஷ் கூறியதை தாம் செய்து வருவதே போதுமானது எனக் கருதினார். இதை எதிர்த்த எம்எல்ஏக்கள் மாஞ்சியை பொது மேடைகளில் கடுமையாக விமர் சிக்கத் தொடங்கினர். இதுகுறித்து மாஞ்சி அளித்த புகாரை நிதிஷ் கண்டுகொள்ளாமல் இருந்துவிட் டார். இதனால் மிகுந்த அவமானம் அடைந்த மாஞ்சி, நிதிஷ் ஆதரவு பெற்ற அமைச்சர்களை நீக்கியதால் பிஹார் அரசியலில் குழப்பம் உருவாகி உள்ளது. முக்கிய எதிர்க் கட்சியான பாஜக, மாஞ்சிக்கு அளித்த ஆதரவும் இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

இதனால் ஐக்கிய ஜனதா தளம் கட்சி எம்எல்ஏக்கள் ஒன்றுகூடி முதல்வர் மாஞ்சியை அப்பதவியிலிருந்து நீக்கி உள்ளனர். இத்துடன் அக்கட்சியின் தலைவர் சரத் யாதவும் மாஞ்சியை கட்சியிலிருந்தும் நீக்கி உள்ளார். முதல்வரை கட்சியை விட்டே நீக்கும் சம்பவம் முதன்முறை அல்ல. ஐக்கிய ஜனதா தளத்துக்கு முன்பாக ஆந்திராவில் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றது.

1984-ம் ஆண்டு ஆந்திர மாநில முதல்வராக இருந்த என்.டி.ராமா ராவ் இதய அறுவை சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல வேண்டியிருந்தது. இதனால் தனது மூத்த அமைச்சரும் நம்பிக்கைக்கு உரியவருமாக இருந்த நாதெல்லா பாஸ்கர ராவிடம் முதல்வர் பொறுப்புகளை மட்டும் ஒப்படைத்துச் சென்றார்.

இதன் மூலம் `பொறுப்பு’ முதல்வராக இருந்த பாஸ்கர ராவுக்கு ஆளுநர் ராம் லால், 1984-ம் ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி முதல்வராகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதற்கு அப்போது ஆந்திராவில் எதிர்க் கட்சியாகவும் மத்தியில் ஆளும் கட்சியாகவும் இருந்த காங்கிரஸ் மறைமுக ஆதரவு அளித்தது.

வெளிநாட்டிலிருந்து ராம ராவ் திரும்பியும் பாஸ்கர ராவ் தனது பதவியை ராஜினாமா செய்ய மறுத்துவிட்டார். இதனால் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தைக் கூட்டி, பாஸ்கர ராவை கட்சியிலிருந்து நீக்கினார் ராமா ராவ். பதிலுக்கு தனது ஆதரவு எம்எல்ஏக்கள் கூட்டத்தைக் கூட்டிய பாஸ்கர ராவ், ராமா ராவை கட்சியிலிருந்து நீக்கினார். இதனால், ஆந்திராவில் நிலவிய குழப்பமான அரசியல் சூழலில் கம்யூனிஸ்டுகள் உட்பட 17 கட்சிகள் ராமா ராவுக்கு ஆதரவளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்காக, `தர்மயுத்தம்’ என்ற பெயரில் ராமா ராவ் மாநிலம் முழுவதும் தீவிர எதிர்ப்பு பிரச் சாரத்தில் இறங்கினார். அத்துடன் தனது ஆதரவு எம்எல்ஏக்களை டெல்லிக்கு அழைத்துச் சென்று அப்போது குடியரசுத் தலைவராக இருந்த ஜெயில் சிங்கின் முன் நிறுத்தினார்.

இதை ஏற்றுக்கொண்ட ஜெயில் சிங், ஆளுநர் ராம் லாலை திரும்பப் பெற்று, அந்தப் பதவியில் சங்கர் தயாள் சர்மாவை அமர்த்தினார். சர்மா பரிந்துரையின் பேரில், பாஸ்கர ராவ் 31 நாட்களுக்குப் பிறகு பதவியிலிருந்து நீக்கப்பட்டார். பின்னர் 1984-ம் ஆண்டு செப்டம்பர் 16-ம் தேதி இரண்டாவது முறையாக ராமா ராவ் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.

ராமா ராவ் செய்தது போலவே இப்போது, தனது எம்எல்ஏக் களை டெல்லிக்கு அழைத்துச் சென்று குடியரசுத் தலைவர் முன்பு நிறுத்த திட்டமிட்டுள்ளார் நிதிஷ் குமார்.

SCROLL FOR NEXT