டெல்லியில் கடந்த சில மாதங்களாக தேவாலயங்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில், மதக் கலவரங்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட கேஜ்ரிவால் கூறியதாவது:
மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற் காக, அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களுடன் நான் இணைந்து பணியாற்றுவேன். கடந்த சில மாதங்களாக டெல்லியில் உள்ள தேவால யங்கள் மீது மர்ம நபர்கள் சிலர் தீ வைத்ததுடன் மதக் கலவரத்தையும் உருவாக்க முயன்றனர். இதை டெல்லிவாசிகள் ஏற்பதில்லை என்பதால், மதக் கலவரங்களை தூண்டுபவர்கள் யாராக இருந்தாலும் இனி அதுபோன்ற செயலை நிறுத்திக் கொள்ளுங்கள். தொடர்ந்து இதுபோன்ற செயலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
டெல்லி அரசுக்கு முழு அதிகாரம்
மத்திய அரசின் நல்ல திட்டங் களுக்கு ஆதரவு தருவோம் என பிரதமரை சந்தித்தபோது தெரி வித்தேன. டெல்லியை சிறந்த நகரமாக மாற்ற விரும்புவதாகவும் தெரிவித்தேன். கடந்த 15 ஆண்டுகளாக தேர்தல் பிரச்சாரத்தின்போது, டெல்லிக்கு முழு அதிகாரம் அளிக்கப்படும் என பாஜக தனது தேர்தல் அறிக்கையில் கூறி வந்தது.
இப்போது மத்தியிலும், டெல்லியிலும் ஒரே விஷயத்தை நிறைவேற்ற விரும்பும் அரசுகள் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியில் உள்ளன. டெல்லிக்கு முழு அதிகாரம் வழங்க இதைவிட பொன் னான வாய்ப்பு வேறு எப்போதும் அமையாது என பிரதமரிடம் எடுத்துரைத்தேன்.
டெல்லியில் நடைபெறும் குற்றங் களை கவனிக்க பிரதமருக்கு நேரம் போதாது. எனவே, டெல்லியை பாதுகாக்கும் பொறுப்பை டெல்லிவாசிகளிடம் (அரசு) கொடுத்து விட்டால் நாட்டின் வளர்ச்சிப் பணி களில் தங்களால் அதிக கவனம் செலுத்த முடியும் என்று பிரதமரிடம் கூறியுள்ளேன்.
கட்சியினருக்கு எச்சரிக்கை
டெல்லி தேர்தல் முடிவு வெளியான பிறகு, நமது கட்சியினர் அளித்த பேட்டியில் கொஞ்சம் அகங்காரம் இருப்பதாகத் தெரிகிறது. இது சரியல்ல. இந்த காரணத்தால்தான் காங்கிரஸை மக்கள் தோற்கடித்தனர். மக்களவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பாஜக இன்று தோல்வி அடைந்ததற்கும் அகங்காரமே காரணம். கட்சியினர் இதைப் புரிந்துகொண்டு எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
கடந்த டெல்லி தேர்தலில் 28 இடங்களில் வென்றதால் எங்களுக்கு அகங்காரம் இருந்தது. அதற்கு மக்களவை தேர்தலில் நல்ல பாடம் புகட்டப்பட்டது. எனவே, டெல்லி வாசிகள் விசுவாசம் கொண்டு எனக்கு அளித்த உத்தரவின்படி, வரும் ஐந்தாண்டுகளும் டெல்லி மக்களுக்காக சேவை புரிவேன். எனது பொறுப்புகளை முழு மூச்சுடன் நிறைவேற்ற பாடுபடுவேன்.
ஆம் ஆத்மி கட்சியினர் தனது மருத்துவமனைக்கு வந்து ரவுடித்தனம் செய்வதாக ஒரு மருத்துவர் என்னிடம் புகார் செய்தார். அவர் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவராக இருக்க மாட்டார். இனி அப்படி யாராவது அவ்வாறு செயல்பட்டால் அவர்களை பிடித்து போலீஸில் ஒப்படையுங்கள்.
வியாபாரிகளிடம் அதிகாரிகள் இனி பணம் (மாமூல்) வசூல் செய்ய மாட்டார்கள். ஆனால் வருமானத் துக்குரிய வரியை நீங்களே முன்வந்து செலுத்திவிடுங்கள். உங்கள் வரிப் பணத்தில் ஒரு ரூபாயைக்கூட வீணாக்காமல், நலத்திட்டங்களை செய்வோம்.
விஐபி கலாச்சாரத்துக்கு முடிவு
டெல்லியில் விஐபி கலாச் சாரத்துக்கு முடிவு கட்ட விரும்பு கிறோம். ஐரோப்பிய நாடுகளில் பேருந்து நிலையங்களில் பிரதமர் நிற்பதைப் பார்க்க முடியும். அதன் வழியில் இனி டெல்லியில் முதல்வர் மற்றும் அமைச்சர்களின் வாகனங்களில் சிவப்பு விளக்குகளை பயன்படுத்தமாட்டோம். ஒரு மனிதன் எவ்வளவு உயர்ந்தாலும் அவன் இருந்த நிலையை மறக்கக் கூடாது. இவ்வாறு கேஜ்ரிவால் தெரிவித்தார்.
பதவி ஏற்பு விழா துளிகள் ...
* காஜியாபாத்தின் கவுசாம்பியில் உள்ள தனது அடுக்கு மாடி குடியிருப்பிலிருந்து குடும்பத்தாருடன் நேற்று காலை 11.30 மணிக்கு காரில் கிளம்பினார் கேஜ்ரிவால். தாய் கீதா தேவி, கேஜ்ரிவாலுக்கு நெற்றியில் வெற்றித் திலகமிட்டு ஆசீர்வதம் செய்து வழியனுப்பினார். டெல்லி சாலைகளின் அனைத்து சிக்னல்களிலும் அவரது வாகனம் மற்ற வாகனங்களைப் போலவே நின்று சென்றது. அப்போது, வாகனத்தில் இருந்தபடி பொதுமக்களைப் பார்த்து கை அசைத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார் கேஜ்ரிவால்.
* நண்பகலில் ராம் லீலா மைதானம் வந்து சேர்ந்த கேஜ்ரிவாலுக்கு அங்கு கூடியிருந்த ஆம் ஆத்மி கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பெருத்த ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்தனர். பின்னர் காத்திருப்பு அறையில் இருந்த கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் அமைச்சரவை சகாக்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
* பதவியேற்பு விழாவுக்கென புதிய உடை எதுவும் அணியவில்லை. சாதாரணமாக பழுப்பு நிற பேண்ட், நீலநிற சட்டை மற்றும் நீலநிற ஸ்வெட்டரை அணிந்து வந்தார். வழக்கமாக குளிருக்காக அணியும் மப்ளர் அணியவில்லை.
* மணீஷ் சிசோடியா, அசீம் கான் மற்றும் சத்யேந்தர் ஜெயின் தவிர மற்ற மூவரும் அரசியல்வாதிகள் வழக்கமாக அணியும் குர்தா, பைஜாமாவுடன் ஜாக்கெட் அணிந்திருந்தனர். பதவி ஏற்பதற்காக மேடை ஏறும்போது கேஜ்ரிவால் உட்பட அனைவரும் ஆம் ஆத்மி கட்சியின் அடையாளமான வெள்ளை தொப்பி அணிந்திருந்தனர்.
* ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களின் குடும்பத்தினர் இந்தமுறை பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டனர். ஆனால் இவர்களுக்காக சிறப்பு இடம் எதுவும் ஒதுக்கப்படவில்லை. தொண்டர்களுக்கு மத்தியிலேயே பாதுகாப்புடன் அமர வைக்கப்பட்டனர்.
* சுமார் 50 ஆயிரம் பேர் அமரும் வசதி கொண்ட அந்த மைதானம் முழுவதும் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. இதனால் மைதானத்துக்கு வெளியிலும் ஆயிரக்கணக்கானவர்கள் நின்றபடி விழாவைப் பார்த்து ரசித்தனர். ஆம் ஆத்மி கட்சியினர் பலரிடம் தேசியக்கொடிகளும் சிலரிடம் கட்சி பெற்ற இடங்களின் எண்ணிக்கையைக் குறிப்பிடும் வகையில் ‘ஏகே-67’ என எழுதப்பட்ட பதாகைகள் காணப்பட்டன.
* தனது உரையின் இறுதியில் கேஜ்ரிவால், கடந்தமுறையைப் போலவே தான் இயற்றிய தேச ஒற்றுமை மற்றும் சகோதரத்துவப் பாடலை பாடினார். இது கடந்த 1959-ம் ஆண்டு வெளியான ‘பைகாம்’ என்ற இந்திப்படத்தின் பாடல் ஆகும்.