டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மும்முரமாக செய்து வருகிறது.
70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 7-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் 67.08 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்குகளை எண்ணும் பணி நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. காலை 11 மணிக்குள் முன்னிலை நிலவரம் தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் ஆம் ஆத்மி அதிக இடங்களைக் கைப்பற்றக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருப்பதால் டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு கூடியுள்ளது. ஆனால் வாக்கு எண்ணிக்கையின்போது கருத்துக் கணிப்பு முடிவுகள் பொய்யாகும் என்று பாஜக நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளது.
ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளராக அர்விந்த் கேஜ்ரிவால் களத்தில் உள்ளார். பாஜக தரப்பில் கிரண் பேடி, காங்கிரஸ் சார்பில் அஜய் மக்கான் ஆகியோர் முன்னிறுத்தப்பட்டுள்ளனர்.
கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி ஆம் ஆத்மி-பாஜக இடையே மட்டுமே கடும் போட்டி நிலவுகிறது. எனவே அர்விந்த் கேஜ்ரிவால், கிரண் பேடி ஆகியோரில் முதல்வராக பதவியேற்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.