டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் சரிதா சிங் கார் மீது நேற்றிரவு மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
டெல்லி ரோத்தாஸ் நகர் தொகுதியின் ஆம் ஆத்மி வேட்பாளர் சரிதா சிங். இவர் நேற்றிரவு அவரது காரில் வந்து கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள் வாகனத்தை இரும்புக் கம்பிகள், மரத் தடிகள் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தாக்குதலில் கார் கண்ணாடிகள் சேதமடைந்தன. இருப்பினும், அதிர்ஷ்டவசமாக சரிதா சிங்குக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.
இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் இன்னும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யவில்லை. ஆனால் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என போலீஸார் கூறினர்.
டெல்லியில் வரும் 7-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், ஆம் ஆத்மி வேட்பாளர் வாகனம் தாக்கப்பட்டுள்ளது.